நாடாளுமன்ற தேர்தல் தகராறு வழக்கு: திமுக.வைச் சேர்ந்த 6 பேர் விடுதலை
நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற தகராறில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து திமுக பகுதிச் செயலாளர் உள்ளிட்ட 6
நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற தகராறில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து திமுக பகுதிச் செயலாளர் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, 118-ஆவது வட்டத்தில் உள்ள திவான் சாகிப் தெருவில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இந்த நிலையில், இந்த புகார் குறித்து அதிமுக-திமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி, வழக்குரைஞர் சிவக்குமார் ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவினர் மீது புகார் செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அன்புதுரை, வட்டச் செயலாளர் யுவராஜ், மாவட்ட பிரதிநிதி கருணா தங்கம், ஜெயக்குமார், இளைஞரணியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் கேசவன் ஆகியோர் மீது ராயப்பேட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.தனசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால், அன்புதுரை உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.