காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டம்: நாராயணசாமி எதிர்ப்பு
காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு உடன்பாடு இல்லை. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஏற்க முடியாது. மேலும் மாநில அரசு அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.
திமுக உண்ணாவிரதம்
தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து திமுக நடத்தும் உண்ணாவிரதபோராட்டத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். தமிழக சட்டப்பேரவையில் 3 விதங்களில் வாக்கெடுப்பு நடத்தலாம். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்று இருக்கலாம். எதிர்கட்சிகளை வெளியேற்றி விட்டு வாக்கெடுப்பு நடத்தியது சரியானதல்ல. தமிழக எதிர்க்கட்சி தலைவர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
பன்றிக் காய்ச்சல் குறித்த கேள்விக்கு புதுச்சேரியில் பன்றி காய்ச்சல் தொற்று குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் இருந்து சிகிச்சை பெற இங்கு வருவதால் இங்கே பன்றி காய்ச்சல் தொற்று அதிகம் இருப்பதாக தோன்றுகின்றது. கபசுர நீர் (நிலவேம்பு கஷாயம் ) அனைத்து பகுதிகளிலும் கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நீட் தகுதித் தேர்வு குறித்து கூறும்போது நீட் தேர்வு புதுச்சேரியில் விலக்கு அளிப்பதற்கு, தமிழகத்தை போல் அமைச்சரவையில் சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் நாராயணசாமி.