திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியினர் காளையுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அ. பீட்டர் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த வி. சண்முகம், மதிமுக மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன்,
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லட்சுமணன், நாம்தமிழர் கட்சி நிர்வாகி சிவக்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலர் இல்யாஸ், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மறியல்: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் பாளையங்கோட்டையில் கல்லூரி முன்பு திருச்செந்தூர் பிரதானச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரவைத் தலைவர் சுடலைக்கண்ணு தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காளையுடன் வந்து மனு: ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த மத்திய அரசு
அனுமதிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். உடையார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காளையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.