முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சியை அடுத்த கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு: 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருங்குளத்தில், அரசு அனுமதியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார்

Updated On : 29 ஜனவரி, 2017 at 6:32 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருங்குளத்தில், அரசு அனுமதியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 200 வீரர்களும், 300-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன. 2 பேர் படுகாயம் உள்பட 37 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில், அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலய வளாகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். உச்சநீதிமன்ற தடையை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இதற்கிடையே ஜல்லிக்கட்டு தடையை அகற்றக்கோரி  மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் பலனாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருங்குளம் பகுதியிலும் ஜன. 29-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் கருங்குளத்தில் முகாமிட்டு ஜல்லிக்கட்டு நடத்தும் பணிகளை தீரவிப்படுத்தினர்.

Advertisement

அறிவித்தபடியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. கால்நடைத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் மணப்பாறை வட்டார மருத்துவ அலுவலர் பொன்சாந்தி உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கருங்குளம் வாடிவாசலில் முகாமிட்டு, காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ சோதனை செய்து, சான்றளித்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் துள்ளியோடிய காளைகளை வீரர்கள் அடக்கினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்கா காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வீர விளையாட்டில் மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (19) உள்ளிட்ட இருவர் குடல் சரிந்து படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர்களும் சேர்த்து 35 பேர் சிறு சிறு காயங்கள் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் கே.எ. பழனிசாமி, மாவட்ட வருவாய் அலவலர் க. தர்ப்பகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.

நீண்ட கால போராட்டத்துக்குப் பின்னர் அரசு அனுமதியுடன் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பதால் ஏராளமானோர் இதை பார்வையிட வந்திருந்தனர். திருச்சி மட்டுமின்றி தேனி, மதுரை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் மற்றும் காளைகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.