முகப்பு
தற்போதைய செய்திகள்

பெல் வேங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி பெல் நகரியத்திலுள்ள அருள்மிகு சிறி வேங்கடாசலபதி திருக்கோயிலில் புதன்கிழமை

Updated On : 1 மார்ச், 2017 at 6:39 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM

திருச்சி பெல் நகரியத்திலுள்ள அருள்மிகு சிறி வேங்கடாசலபதி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டுத் தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெல் நகரியத்தில் அமைந்துள்ள சிறிதேவி, பூதேவி சமேத சிறி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் ஆண்டு பெருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. எட்டாம் ஆண்டு பெருவிழா பிப்ரவரி 21 ஆம் தேதி யாகசாலை பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து 22 ஆம் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனங்களிலும், 23- ஆம் தேதி காலை வேணுகோபாலன் திருக்கோலத்தில் பல்லக்கிலும், இரவு சேஷவாகனத்திலும் சுவாமி புறப்பாடாகி வீதியுலா வந்தார்.

24 ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம்- கருட வாகனம், 25 ஆம் தேதி ஹம்சம், ஹனுமந்த வாகனம், 26 ஆம் தேதி சிம்மம், யானை வாகனங்கள், 27 ஆம் தேதி இரவு சூர்ணாபிஷேகம், பூந்தேரில் பெருமாள் புறப்பாடு, 28 ஆம் தேதி யாளி, குதிரை வாகனம் என காலை மற்றும் இரவு நேரத்தில் சுவாமி புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சிறிதேவி, பூதேவி சமேதராய் அருள்மிகு வேங்கடாசலபதி திருத்தேரில் எழுந்தருளிய பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெல் செயல் இயக்குநர் ஆர். ராஜாமனோகர் காலை 10 மணிக்குத் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தைத்தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோடும் வீதிகளின் வழியாகச் சென்ற தேர் பிற்பகல் 12.34 மணிக்கு நிலையை வந்தடைந்தது. மாலையில் கூத்தைப்பார் குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

வியாழக்கிழமை (மார்ச் 2)  81 கலச திருமஞ்சனம், புஷ்பயாகம். சப்தாவரணம், கொடிஇறக்கத்த்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்ட விழாவில், சிறி வேங்கடாசலபதி சேவா சமிதி துணைத் தலைவர் எஸ். மனோகர், எம்.பழனிவேல், டீ.சேகர், குருச்சந்திரன், சேவா சமிதி செயலர் கே.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.