முகப்பு
தற்போதைய செய்திகள்

தலைமைத் தேர்தல் ஆணையருடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதன்கிழமை சந்திக்க உள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கோர உள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் புகார் அளித்தனர். இதற்கு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா அளித்த விளக்கத்தில், புகார் அளித்துள்ள மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோர்தான் தம்மை முன்மொழிந்து பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாக விளக்கம் அளித்தார். அதற்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தில்லியில் புதன்கிழமை பகல் 12 மணியளவில் சந்தித்துப் பேச உள்ளார். இதற்காக புதன்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்ல உள்ளார்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: இந்தச் சந்திப்பின்போது, அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பதற்கான விளக்கங்களை பன்னீர்செல்வம் அளிக்க உள்ளார்.

மேலும், உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோர உள்ளதாக அவர் அணியினர் தெரிவிக்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்பட முக்கிய நிர்வாகிகள் செல்ல உள்ளனர்.  சிபிஐ விசாரணை தேவை: இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் அணியின் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறுகிறார். அப்படியொரு விசாரணை நடைபெறவில்லை என்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →