நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
புதுச்சேரி: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க உள்ளனர்.
என்.எல்.சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டுமென ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த ஜீலை மாதம் முதல் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் , என்.எல்.சி நிர்வாக தரப்பில் தலைமை பொது மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.359 மற்றும் ஏற்கனவே ஒப்பந்தங்கள் மூலம் பெற்ற ஊதிய உயர்வு ரூ. 218 இரண்டும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 577 ஊதியமாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் என்.எல்.சி நிர்வாகம் தற்போது வழங்கிவரும் ரூ. 526 மட்டுமே வழங்க முடியும் என்றும், இதில் மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்ததால் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்த ரூ.577யை தர நிர்வாகம் மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. வரும் சனிக்கிழமை நெய்வேலியில் நடைபெறும் பேரவை கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.