தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் பஞ்சமில்லா பரபரப்புகளும்; பற்றி எரியும் வதந்'தீ'களும்

திருமலை சோமு

சூடான காப்பி டீ மட்டுமல்ல சூடான செய்தியும் கூட நம்மை சுறுசுறுப்பாக்கும் என்பதற்கு சமீபத்திய தமிழக அரசியல் சூழலை உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு நாட்டின் நிகழ்வுகள் நம்மை விழிப்படைய செய்து விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. 

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஏறத்தாழ ஒரு க்ரைம் நாவல் படிக்கும் வாசகனைப் போல் நம் எல்லோரையுமே ஆக்கி வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசயமும் தமிழக அரசியல் போக்கும், நாளுக்கு நாள் கணிக்க முடியாத அளவுக்கு திருப்பங்களும் நகர்வுகளும் நிறைந்ததாக இருப்பதோடு, அரசியல் நோக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண டீக்கடை விவாதங்களிலும் சந்தை வியாபாரிகள் மத்தியிலும் சூடு பிடித்திருப்பதை காணமுடிகிறது. 

அதேசமயத்தில் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் மீம்ஸ்களும், வதந்திகளும் வேறு தன் பங்கிற்கு மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்து அழகு பார்க்கிறது. காவல் துறை ஆணையரின் இன்றைய அறிவிப்பானது அதற்கு மேலும் வழிவகுத்தது போல் இருந்தது.

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த  உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, முக்கிய புள்ளிகளில் யாராவது மரணமா என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது. இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின. 

இதனிடையே தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. அத்துடன் சட்டப் பேரவை முடக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் உலா வந்தன. 

மேலும் திமுக தலைவர் கருணாநிதி, அதே போல சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜன் தொடர்பாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில்  திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என கனிமொழி எம்.பி. கூறினார்.  மேலும் அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார். 

எனவே பரபரப்பும், வதந்திகளும் கொஞ்சம் கட்டுக்குள் வந்தன என்றாலும் இவற்றையும் கடந்து சென்னை ஆளுநர் மாளிகையில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுடன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் சந்தித்துள்ளனர் எனும் போது இன்னும் ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் வெளியாக்கூடுமோ என்ற சந்தேகமும்  சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பும், சாமானிய மக்களிடம் எழுவது இயல்பாகவே உள்ளது. எது எப்படியோ அடுத்து வரும் வாரங்களிலும் தமிழக அரசியலில் பரபரப்பு தொடரும் என்றே தெரிகிறது.                                                              

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT