ஐபிஎஸ் போட்டி நடத்தப்பட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்: வேல்முருகன் பேட்டி
சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் அதை நிறுத்துவதற்கு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்
சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் அதை நிறுத்துவதற்கு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, கடையடைப்பு, ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என பல தரப்பினரும், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
சில அரசியல் கட்சியினர், சேப்பாக்கம் மைதானத்திற்குள், ரசிகர்கள் போல ஊடுருவி, ரகளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மைதானத்தை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுப்பிரிவு போலீஸார், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்றும் ஐபிஎல் போட்டியை நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று வேல்முருகன் கூறினார்.
மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை கிரிக்கெட் வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் திட்டமிட்டப்படி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ப்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், அடையாறில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.