மெரீனா கடற்கரையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் மெரீனா கடற்கரையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது ஆஜரான வழக்குரைஞர் மயிலை சத்யா, தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு திரண்டதைப் போல் இந்த போராட்டத்துக்காக இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் திரள்வதை தடுக்கும் வகையில் போலீஸôர் மெரீனா கடற்கரையின் பல்வேறு இணைப்புச் சாலைகளை அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கடற்கரையில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் சாலையின் நடுவழியிலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கோடைக் காலங்களில் செலவில்லாத பொழுதுப்போக்கு சுற்றுலா தளமாக மெரீனா விளங்குகிறது. போராட்டத்தை காரணம் கூறி மெரீனாவுக்கு வரும் பொதுமக்களை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
Advertisement
எனவே மெரீனா கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களை தடுக்கக் கூடாது, இணைப்புச் சாலைகளை அடைக்ககூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார். இதனையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.