திருச்சி: முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது என்றும் முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் உடைந்தது விபத்தே என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் பழனிசாமி, முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி.
ஆய்வுக்கு பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி முக்கொம்பில் மதகு உடைந்த பகுதியில் 3 நிலைகளில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும். உடைந்த பகுதிகளை புனரமைத்து தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்துவது மட்டுமல்லாது புதிய கதவணைகள் கட்டுவது அவசியமானது. இதற்கு தகுந்தபடி பொதுப்பணித்துறை சார்பில் ரூ.325 கோடியில் புதிய கதவணைகள் கட்டப்படும். புதிய கதவணைகள் பணி விரைவில் தொடங்கி 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். 100 மீட்டர் தள்ளி கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள 10 மதகுகள் கொண்ட கதவணை அய்யன் வாய்க்காலில் வலுவிழந்தாலும் அதற்கு பதிலாக புதிய கதவணை 10 மதகுகள் கொண்டதாக ரூ. 85 கோடியில் கட்டப்படும் என்றார்.
மேலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததிற்கும் மணல் அள்ளியதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால், அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்தது. மேலணையில் இருந்து வெகுதொலைவில் உள்ள குவாரியில்தான் மணல் அள்ளப்படுகிறது என தெரிவித்தார். மேலும் மணலுக்கு பதில் முழுவதும் எம்.சாண்ட் மூலமாக கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.