தற்போதைய செய்திகள்

பிராண வாயு கொடுத்து நம்மை நடமாட வைக்கும் மரங்களை வளர்ப்போம்: நடிகர் விவேக்

DIN

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் பிராண வாயு கொடுத்து நம்மை இந்த உலகில் நடமாட வைக்கும் மரங்களை அதிகளவில் வளர்ப்போம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், நடிகருமான விவேக் கூறினார்.
திருவண்ணாமலை நகரின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்துதல், நகரின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்காக தூய்மை அருணை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் மூலம் திருவண்ணாமலை நகரம், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மாட வீதிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக, திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரே நடைபெற்ற இந்த விழாவுக்கு தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலரும், நடிகருமான விவேக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும். இவ்வளவு சக்திவாய்ந்த இடம் தான் திருவண்ணாமலை. இங்கு பிறந்த அருணகிரிநாதர், உலகத்தில் யாராலும் எழுத முடியாத சந்தங்களுடன் கூடிய திருப்புகழை எழுதினார்.
ரமணர், யோகி ராம்சுரத் குமார், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் இந்த மண்ணுக்கு அடிமையாகி உள்ளார்கள். இவ்வளவு புகழ்பெற்ற இந்த ஊரில் மரங்கள் குறைவாக உள்ளன. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது தொப்புள்கொடி வழியாகச் சுவாசிக்கிறது. அதுதான் நாம் பார்த்த முதல் யூ-டியூப். குழந்தை பிறந்ததில் இருந்து அது வாழ்ந்து முடியும் வரை அதன் நுரையீரலை இயக்குவது பிராண வாயு. இந்த வாயுவை தருபவை மரங்கள். அவைகள் தான் கரியமில வாயுவில் இருந்து பிராண வாயுவைப் பிரித்து நமக்கு தருகின்றன. ஒரு தாய் நம்மை 10 மாதங்கள் தான் வயிற்றில் வைத்து காப்பாற்றுகிறார். வாழ்நாள் முழுவதும் காப்பற்றுவது மரங்கள் தான். எனவே, மரங்கள் தாயைவிட உயர்ந்தவை.
ஒரு மனிதனை 60 வயது வரை செயற்கையாக சுவாசிக்க வைத்து வாழ வைக்க சுமார் ரூ.5 கோடி செலவாகிறது. ஆனால், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் பிராண வாயுவைக் கொடுத்து நம்மை இந்த உலகில் நடமாட வைக்கும் மரங்களை நாம் அதிகளவில் வளர்ப்போம் என்றார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில், போளூர் சாலை, ஸ்ரீபச்சையம்மன் கோயில் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விவேக், எ.வ.வேலு எம்எல்ஏ ஆகியோர் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தனர். விழாவில், தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி, ப.கார்த்திவேல்மாறன், சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், சினம் பெருமாள், இர.செல்வராஜ், இரா.ஜீவானந்தம், எழுத்தாளர் ந.சண்முகம், குட்டி க.புகழேந்தி, ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் அருணை பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT