ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை, சவுதி அரேபியா சரிகட்டும் என இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளார்.
அணு ஆயுத உற்பத்தி தடை தொடர்பாக 2015-இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகக் கூறி அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான சில பொருளாதாரத் தடைகளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி அமெரிக்கா அமல்படுத்தியது.
ஈரானிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடுப்பது, அந்நாட்டுக்கான சர்வதேச வங்கிச் சேவைகளை முடக்குவது உள்ளிட்ட பொருளாதாரத் தடைகள் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது.
இந்தத் தடை இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்பட்டது.
ஈரானிடம், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய வங்கிகள் மூலமாக யூரோக்களில் இந்தியா பணம் செலுத்தி வந்தது. அமெரிக்காவின் தடை அமலாகும் பட்சத்தில் இந்த பரிவர்த்தனை முடக்கப்படும்.
இந்நிலையில், ஈரானிடம் இருந்து அடுத்த மாதம் 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), மங்களூரு ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன.
மாதந்தோறும் வழக்கமாக இறக்குமதி செய்யும் அளவிலேயே தற்போதும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், கச்சா எண்ணெய் விற்பனையில் ஈரான் அரசு சிக்கி வருகிறது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை சரிகட்டுமாறு, சவுதி அரேபியா உள்ளிட்ட பெட்ரோல் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். தொடக்கத்தில், அவரது கோரிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா, தற்போது டிரம்பின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ள சவுதி அரேபியா, சமீபத்திய கச்சா எண்ணெய் உயர்வுக்கு ஈரான் காரணம் இல்லை என நம்புவதாக இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா குவைத்துடனான முதலீட்டாளர்களுடன் எண்ணெய் வளத்தை மீண்டும் தொடங்கும் என நம்புவதாகவும், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்ய குவைத்துடன் ஒரு ஒப்பந்தத்தை கொண்டிருப்பதாகவும், இதனால் சவுதி அரேபியாவிற்கும் குவைத்திற்குமான எண்ணெய் உற்பத்தி திறன் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.