முகப்பு
தற்போதைய செய்திகள்

சபரிமலை விவகாரம்: அரசியல் லாபத்திற்காக பிரச்னைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது - பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு கேரள

Updated On : 8 அக்டோபர் 2018, 3:28 pm IST
பகிர்:


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடை இருந்து வந்தது. இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

இதற்கு சில தரப்பினர் ஆதரவும், பரவலாக எதிர்ப்புகளும் தெரிவித்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று கேரள அரசு தெரிவித்தது. 

Advertisement

Advertisement

தொடர்ந்து தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. எனினும், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளம் உள்பட நாடெங்கிலும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களும் பெருமளவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சபரிமலை தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம், நாயர் சேவை சொசைட்டி (என்எஸ்எஸ்) மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் கோட்டயம் மாவட்டம் சங்கனாசேரியில் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற்றது. தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம் இவ்வாறு பேரணி நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மறுசீராய் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும். மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை எதிர்த்து போராடுவது அரசின் நோக்கம் இல்லை. அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். 

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்னைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது. அரசும், அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பக்கம் உள்ளோம். இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.