தற்போதைய செய்திகள்

சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

DIN


புதுதில்லி: இரட்டை கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பர்வாலா பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் சாமியார் ராம்பால் (67). கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று இவரது ஆஸ்ரமத்தில் 4 பெண்களும், ஒரு குழந்தையும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். 

இக்கொலை தொடர்பாக ஷிவ்பால் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும், அதே மாதத்தில் மேலும் ஒரு பெண்ணும் ஆஸ்ரமத்தில் இறந்து போனதாக சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் 2014-ம் ஆண்டு 19-ம் தேதி கொலை முயற்சி மற்றும் கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சாமியார் ராம்பால் மற்றும் 26 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர், ஆஸ்ரமத்தில் போலீஸார் நடத்திய சோதனையின் போது, ​​ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள், மிளகாய் குண்டுகள், அமில ஊசிகள், கர்ப்ப பரிசோதனை சாதனங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினார்கள்.

கைதுக்கு கண்டனம் தெரிவித்து ராம்பாலின் ஆதரவாளர்களும் பல்வேறு வன்முறையில் ஈடுபட்டதால் ஒருவர் கொல்லப்பட்டார், 59 பேர் காயமடைந்தனர். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 26 பேரும் குற்றவாளிகள் என்பது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டதாக மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஆர்.சாலையா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த இரு வழக்கின் தீர்ப்பு அக்.16 மற்றும் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று  ஹிஸார் நீதிமன்றத்தில் ராம்பால் உட்பட வழக்கில் தொடர்புடைய 22 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர். பரபரப்பான இவ்வழக்கு விசாரணையால் ஹிஸார் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும், ராமாபால் மீது உள்ள இரண்டாம் கொலை வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராம்பால் யார்?: ஹரியானா மாநிலம் சொனேபட் மாவட்டத்தில் உள்ள தனனா கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்தார் ராம்பால்.

முழு பெயர் ராம்பால் தாஸ். பள்ளிக் கல்விக்குப் பிறகு பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு அரசின் பொது சுகாதாரத் துறையில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். திருமணம் செய்து கொண் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் பல மகள்கள் உள்ளனர். இவரது 48வது வயதில், பணியில் கவனக்குறைவாக இருக்கிறார் என்று துறை சார்ந்த நடவடிக்கை மூலம் 1996-ல் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ராம்பால் தாஸ் வாழ்க்கையில் ஆன்மிகக் காற்று அடிக்கத் தொடங்கியது. 18 ஆண்டு காலம் ஆன்மீக வாழ்க்கையின் அம்சங்களை, பயின்று, ஆன்மீகக் கலையைத் தன் வசப்படுத்தினார் அரசு ஊழியராக இருந்து ஆன்மீக வாதியான சாமியார் ராம்பால், கபீர் பந்த் என்ற மத பிரிவின் தலைவராக இருந்து வருகிறார். ஆதரவாளர்கள் அவரை 'ஜகத்குரு ராம்பல் ஜி' என்றே அழைத்து வந்தனர். 

1999-இல் ரோடக் மாவட்டத்தில் உள்ள காரோடா கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி பக்தர்களைக் கவர்ந்து வந்தார். 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் கபீர் என்பவரின் மறு அவதாரம் தாம்தான் என்று கூறி, லட்சக் கணக்கான மக்களை தன்பால் ஈர்த்தவர் ராம்பால். 

12 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஆஸ்ரமம். உயரமான, பலமான கதவுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டு யாரும் எளிதில் நுழையாத வண்ணம் கோட்டை போல மதில்களும் கொண்டது.ஒரு ஆன்மிகவாதிக்கு இருக்கவேண்டிய அம்சங்களைக் காட்டிலும் சொகுசு வாழ்க்கையில் ஊறி திளைக்கும் மல்டி மில்லினர் போல வாழ்ந்து வந்திருக்கிறார் ராம்பால்.

சாமியாருக்கென சொகுசுக் கார்கள் உள்ளன. அவரின் குடியிருப்பு, 25 அடி நீளத்தில் நவீன நீச்சல்குளம், வெளிநாட்டு ஸ்டைல் குளியல் அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப்பட்ட மாடர்ன் அறைகள், பிளாட் ஸ்க்ரீன் டிவிகள் என 7 ஸ்டார் ஹோட்டலைபோல இருக்கிறது. அத்தோடு மசாஜ் மேடைகள், டிரட் மில், ஜிம்மில் உள்ள நவீன உடற்பயிற்சி சாதனங்கள் என சொகுசு வாழ்க்கையில் ஜொலித்து வந்தவர் சாமியார்.  

ஆஸ்ரமத்தின் உள்ளே எக்ஸ்ரே வசதிகளுடன் கூடிய ஒரு சிறப்பு மருத்துவமனை, இங்கிருந்து ஏராளமான மருந்து பொருட்கள் மற்றும் மூட்டை மூட்டையாய் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள், மிளகாய் குண்டுகள், அமில ஊசிகள், கர்ப்ப பரிசோதனை சாதனங்கள், மாத்திரைகள் உள்ளிட்டவைகள் அதவாது ஒரு மாநிலத்திற்கு எதிராக மினி யுத்தத்தையே நடத்திடக் கூடிய அளவிற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதக்குவியல்களை போலீஸார் கைப்பற்றினார்கள். 

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் அமர்ந்து ராம்பாலின் ஆன்மீக உரையைக் கேட்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கூடம் உள்ளிட்ட அனைத்தும் மூடி சீல் வைக்கப் பட்டுள்ள ஆஸ்ரமம் தற்போது அமைதியாய் இருக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் 40 முறை சம்மன் அனுப்பியும், ஏதோ ஒரு காரணம் கூறி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்து வந்தார் சாமியார் ராம்பால். வெறுத்துப்போன நீதிமன்றம் அவரைக் கைது செய்திட பிடிவாரண்ட் பிறப்பித்தது.   

இதனையடுத்து ஹிசாரில் உள்ள ராம்பாலின் 12 ஏக்கர் பரப்பிலான பிரமாண்ட ஆஸ்ரமத்தைச் சுற்றி வளைத்தது காவல்துறை. ஆனால் கடுமையான எதிர்ப்பை ராம்பால் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து காவல்துறையினர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்து எளிதில் சாமியார் ராம்பாலைக் கைது செய்ய முடியாமல் தவித்தனர். ஆதரவாளர்களின் எதிர்ப்பு போலீஸாரையே கொஞ்சம் அச்சப்ப வைத்தது. 

ஆனாலும் போலீஸார் சாமியாரை கைது செய்திட வேண்டும் என்ற திடமான திட்டத்தில் தாக்குதலைத் தொடுத்தனர். ஆஸரமத்தில் போலீஸாருக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் போலீஸார் மீது சராமரியாக பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. இதனால் நிலை குலைந்த போலீஸார், கலவரத்தை கட்டுக்குள் வர கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரைக்  கலைத்தனர்.

இந்தக் கலவரத்தினால் ஆஸரமம் அருகே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. 3 நாட்களுக்கும் மேல் இந்த மோதல் நீடித்தது. போலீஸாரின் நடவடிக்கையில் 6 பேர் உயிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT