தற்போதைய செய்திகள்

ஆடி அமாவாசை: தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் 

ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்

DIN


ராமேசுவரம்: ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

ராமேசுவரத்தில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு லட்சகணக்கானோர் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர். 

அமாவாசை நாள்களில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி வழிபாடு நடத்துவர். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, சிவராத்திரி போன்ற நாள்களில் ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். 

இந்நிலையில் ஆடி மாத அமாவாசை தினமான இன்று புதன்கிழமை (ஜூலை 31) வந்ததால், லட்சகணக்கான பொதுமக்கள்ராமேசுவரத்தில் அதிகாலையிலேயே குவிந்தனர். 

அக்னி தீர்த்தக் கரையில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், கடலில் புனித நீராடியும் வழிபாடு நடத்தியும், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தும் வருகின்றனர். 

அதிகளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக சீருடையுடன் ஆயிரம் காவல்துறையினரும், சீருடை இல்லாத 500 காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பக்தர்களின் சுகாதார வசதிக்காக நகராட்சியில் 150- க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகளவில் வாகனங்கள் மற்றும் பக்தர்கள் வருவதையொட்டி ராமேசுவரம் தாலுகா பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்லனர். மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்காக ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

SCROLL FOR NEXT