பங்குச் சந்தையில் 2 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி: வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு
இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை ஏற்றத்துடன் முடிவுற்றது.
மும்பை: இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை ஏற்றத்துடன் முடிவுற்றது. நிதி நிறுவனப் பங்குகள், வங்கிப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.
நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைக்கு, மத்திய அரசு நிதித் தொகுப்பு, பொருளாதாரத் தொகுப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும், ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் பொருளாதார நடவடிக்கைகள் உத்வேகம் பெறும் என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.
இதையடுத்து, காலையில் திசை தெரியாமல் இருந்த பங்குச் சந்தை எழுச்சி பெறத் தொடங்கியது. குறிப்பாக நிதி நிறுவனப் பங்குகள், வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.
இதற்கிடையே, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவு, சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், அத்துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், ஐடி குறியீடு வீழ்ச்சியைச் சந்தித்தது. லாபப் பதிவு காரணமாக வியாழக்கிழமை எஃப்சிஜி குறியீடு சரிவைச் சந்தித்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. மிட்கேப் குறியீடு 2.34 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 2.81 சதவீதம் உயர்ந்து நிலைபெற்றன. முன்னணி வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க் குறியீடு 1.80 சதவீதம், ஆட்டோ குறியீடு 1.15 சதவீதம், நிதித் துறை குறியீடு 1.66 சதவீதம் உயர்ந்து நிலைபெற்றன.
மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 284.31 புள்ளிகள் குறைவுடன் 30,095.51-இல் தொடங்கியது. பின்னர் குறைந்த அளவாக 30,016.17 வரை சென்றது. பின்னர் நிதித் துறை, வங்கிப் பங்குகளுக்கு கிராக்கி அதிகரிக்கத் தொடங்கியதும் சந்தையில் எழுச்சி காணப்பட்டது.
அதிகபட்சமாக 30,800.20 வரை சென்றது இறுதியில் 222.80 புள்ளிகள் 0.73 உயர்ந்து 30,602.61 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 67.50 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்ந்து 8,992.80 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலிலும், 10 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலிலும் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல்தரப் பங்குகளில் 35 பங்குகள் ஏற்றம் பெற்ற பட்டியலிலும், 15 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலிலும் வந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி 5.84 சதவீதம் உயர்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்து ஐசிஐசிஐ பேங்க், டைட்டான், எல் அண்ட் டி, எஸ்பிஐ, சன்பார்மா, நெஸ்ட்லே இந்தியா, இண்டஸ் இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 2 முதல் 4.50 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், ஐடி நிறுவனங்களான ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகியவை முறையே 3.97 சதவீதம் மற்றும் 3.75 சதவீதம் குறைந்து அதிகம் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை 2 முதல் 3.65 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
பங்குச் சந்தை கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்திருந்த நிலையில், வியாழக்கிழமை எழுச்சி பெற்றதால், தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.