கரோனா நோய்த்தொற்றால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து: ஐ.நா எச்சரிக்கை
உலகம் முழுவதும் 2018 ஆம் ஆண்டில் இருந்து 1.30 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசிகளும் கிடைக்காத நிலையில்,
உலகம் முழுவதும் 2018 ஆம் ஆண்டில் இருந்து 1.30 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசிகளும் கிடைக்காத நிலையில், அவர்கள் சரியான சுகாதார அமைப்புகள் இல்லாத நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய கரோனா நோய்த்தொற்று மேலும் இந்த நிலைமையை மோசமாக்கி குழந்தைகளுக்கு புதிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. சபையின் அங்கமான யுனிசெப் எச்சரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் ஒட்டுமொத்த உலகமே விழி பிதுங்கி நிற்கும் நிலையில் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், கரோனா நோய்த்தொற்று தோன்றுவதற்கு முன்பாகவே, 2010 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 18.2 கோடி குழந்தைகள் தட்டம்மை, போலியோ உள்ளிட்ட தடுப்பூசிக்கான முதல் தவணையை இழந்துள்ளனர். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 2.03 கோடி குழந்தைகள் தடுப்பூசிக்கான தவணையை தவறவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால், அம்மை, டிப்தீரியா மற்றும் போலியோவுக்கு எதிரான கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கும் முகாம்களை நிறுத்தி வைத்துள்ளது. 25 நாடுகளாவது தட்டம்மைக்கான தடுப்பூசி முகாம்களை ஒத்திவைத்துள்ளது.
இப்போது கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிற நிலையில், குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை கொடுக்க முடியாத சூழலால் இந்த ஆண்டு மட்டுமின்றி அதைத்தாண்டியும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிற தட்டம்மை, டிப்தீரியா, போலியோ உள்ளிட்டவை பேரழிவை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.
ஏனென்றால், உலக அளவில் அம்மை நோயின் முதல் கட்ட பாதுகாப்பு 86 சதவீதமாக மட்டுமே உள்ளது, இது அம்மை நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தேவையில் 95 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அதிக வருமானம் உள்ள நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 2019 -ஆம் ஆண்டில் தட்டம்மை நோய் பரவுவதற்கு வழிவகுத்தது.
நோய்த்தடுப்பு மருந்து ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது மற்றும் மிகவும் வெற்றிகரமான மற்றும் செலவு குறைந்த சுகாதார வழிமுறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலக அளவில் சுமார் 20 மில்லியன் குழந்தைகள் அவர்களுக்கு தேவையான நோய்த்தடுப்பூசிகள் கிடைக்காமல் உள்ளனர் என்று கூறியுள்ளது.
யுனிசெப் அமைப்பின் முதன்மை ஆலோசகரும், தலைமை நோய் தடுப்பாளருமான ராபின் நந்தி கூறுகையில், உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைளில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், “இதுவரை இல்லாத வகையில் குழந்தைகளின் நலன் கேள்வி குறியாக உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான உயிர் காக்கும் பணி முக்கியமானது. அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்காவிட்டால், பலகோடி இளம் உயிர்களின் தலையெழுத்து சிக்கலாகி விடும்” என குறிப்பிட்டார்.
குழந்தைகள் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு முன்பு போலியோ தடுப்பூசியின் மூன்று கால அளவுகளையும் பெற்றிருக்க வேண்டும்.
2010 மற்றும் 2018 -க்கு இடையில், எத்தியோப்பியாவில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகம் உள்ளனர், சுமார் 10.9 மில்லியன் குழந்தைகள் முதல் கால அளவிற்கான அம்மை நோய் தடுப்பூசியை தவறவிட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து காங்கோ ஜனநாயகக் குடியரசில் 6.2 மில்லியனாகவும், ஆப்கானிஸ்தானில் 3.8 மில்லியனாகவும், சாட், உகாண்டாவில் தலா 2.7 மில்லியன் குழந்தைகள் தவறவிட்டுள்ளனர்.
இதனிடையே, ஆப்பிரிக்காவில், பிறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளை கொடுக்க முடியாத சூழலால் கடந்த ஆண்டுகளில் அதிகமான குழந்தைகள் தடுப்பூசிகளைத் தவறவிட்டுள்ளனர். இது காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளில் தட்டம்மை மற்றும் போலியோ நோய்கள் மீண்டும் மீண்டும் பரவுவதற்கு வழிவகுத்தது.
தெற்காசியாவில், 2018 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் குழந்தைகள் எந்த தடுப்பூசிகளையும் பெறவில்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் நிலைமை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது. இவைகள் எல்லாம் இப்போது கரோனா நோய்த்தொற்றுக்கு பரவலுக்கு எதிராக போராடி வருகின்றன.
இந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக, சாத்தியமான இடங்களுக்கு குழந்தைகளுக்கான முக்கியமான தடுப்பூசி பொருட்களை அனுப்பு வருகிறது யுனிசெஃப் .
இந்த ஆண்டு எல்லா வயதினரையும் நோய்களுக்கு எதிராக பாதுகாக்க தடுப்பூசி கட்டாயம் என்பதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.