ஈரோடு : நாடு முழுவதும் இன்று 74ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது.
தேசியக்கொடியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதனை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை முன்னிலையில், ஆட்சியர் சி.கதிரவன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து காவல் துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, சித்த மருத்துவத்துறை, குடும்ப நலத்துறை, மாநகராட்சி, நகராட்சி, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை உட்பட 19 அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், அலுவலர்கள், கரோனா தடுப்பு, விழிப்புணர்வு பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 107 பேருக்கு ஆட்சியர் சி.கதிரவன் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
சுதந்திர தினத்தன்று ஆண்டு தோறும் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளை அழைத்து ஆட்சியர் கௌரவிப்பார். பள்ளி மாணவ, மாணிவகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகள் வ.உ.சி. மைதானத்திற்கு அழைக்கப்படவில்லை.
கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதன்காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டது.
விழாவில் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.பாலகணேஷ், ஈரோடு மண்டல வனப் பாதுகாவவலர் வி.நாகநாதன், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு அலுவலகங்களில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் ஈரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் எம்.இளங்கோவன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈரோடு சம்பத் நகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் முன்பும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி கோயில்கள், மசூதிகள், தேவலாயங்களில் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ஈரோடு காவிரி பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.