கூத்தாநல்லூர் மக்களுக்கு கரோனா பதற்ற விழிப்புணர்வு முகாம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், கரோனா தொற்று பதட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், கரோனா தொற்று பதட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட மனநல திட்டத்தின் கீழ், மாவட்ட மனநலம் மருத்துவ திட்டத்தின் சார்பில், அதங்குடியில் நடைபெற்ற, கரோனா பதட்டத்தை நீக்கும் விழிப்புணர்வு முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் கோ.வெங்கடேசன் தலைமை வகித்தார். கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனர் ப.முருகையன் முன்னிலை வகித்தார், துணைத் தலைவர் ப.ஆனந்த் வரவேற்றார்.
முகாமில், மாவட்ட மனநல மருத்துவர் சக்தி பிரகாஷ், அதங்குடி கிராம மக்கள் மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில், வேலை செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா குறித்த விழிப்புணர்வுகளை விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, ”மாவட்ட மனநல மருத்துவத் திட்டம் மூலமாக, அனைத்து தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சி முறையில், வாரத்திற்கு ஒரு முறை மனநோயாளிகளையும், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளையும் பரிசோதனை செய்து, உரிய அறிவுரை வழங்குகிறோம். மேலும், மனநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
சீனாவில் தொடங்கப்பட்ட கரோனா உலக மக்களின் உயிரைக் குடித்தும், மக்களுக்கு அச்சத்தை அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது. மேலும், படித்தவர்கள், படிக்காத பாமர மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், கரோனா குறித்த பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
தற்போது, கரோனா தொற்று நகரங்களை விட கிராமப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்தான், கரோனா பதட்டத்தை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராமத்தின் கடைசி வரைக்கும் இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறோம்.
கரோனா தொற்று நமக்கு வந்து விடுமோ, பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்து விட்டதே, அதனால் நமக்கும் வந்து விடுமோ என்ற பதட்டம் அனைவரிடத்திலும் வந்துள்ளது. அந்தப் பதட்டத்தால்தான் இரவில் சரியாக தூங்குவதில்லை. இரவு தூங்காமல் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மனச்சோர்வு ஏற்படும்.
புகைப் பிடித்தல், மதுக் குடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை கட்டாயம் நிறுத்த வேண்டும். குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் மாலையில் கொதித்த தண்ணீரில் வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிர்ப்பு சக்திக்கான மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மதுக் குடிப்பதால், நுரையீரல் பாதிக்கப்பட்டு, கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புண்டு. பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியில் வரும் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுதலில் பழகிக் கொள்ள வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். தனித்தனியாக இருந்து, ஒற்றுமையைக் கடைப்பிடித்து, கரோனாவை விரட்டியடிக்க வேண்டும்” என கூறினார்.
முகாமில், ஊராட்சிச் செயலாளர் எம்.தங்கையன் உள்ளிட்ட பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.