ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு: நேதாஜி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
நாளை தமிழகம் முழுவதும் 4 வது முழு ஊரடங்கு கடைப்பிடிக்கவுள்ள நிலையில் ஈரோடு நேதாஜி காய்கறி மார்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
நாளை தமிழகம் முழுவதும் 4 வது முழு ஊரடங்கு கடைப்பிடிக்கவுள்ள நிலையில் ஈரோடு நேதாஜி காய்கறி மார்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
கரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது. எனினும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது.
இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாளை இந்த மாதத்திற்கான 4 வது ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதன்படி நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை காய்கறி கடைகள், மளிகை கடைகள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என எதுவுமே இயங்காது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம் மற்றும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொது ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஊரடங்கு மீறுவோர் குறித்து கண்காணிப்பார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு போது தேவையின்றி வெளியே சுற்றியதாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முழு ஊரடங்கு என்பதால் மீன் கடை மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதேபோல் இன்று டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.