பவானி - குமாரபாளையத்தில் காவிரி ஆற்றின் பழைய, புதிய பாலங்கள் மூடல்
ஈரோடு மாவட்டம் பவானியையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய மற்றும் புதிய பாலங்கள் மூடப்பட்டன.
பவானி: ஈரோடு மாவட்டம் பவானியையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய மற்றும் புதிய பாலங்கள் மூடப்பட்டன.
பவானி புதிய பேருந்து நிலையம் அருகே குமாரபாளையம் செல்ல புதிய பாலமும், பழைய பேருந்து நிலையம் அருகே பழைய பாலமும் உள்ளது. இந்த இரு பாலங்கள் வழியே பொதுமக்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மாவட்டங்கள் வேறு என்றாலும் தொழில், வேலை வாய்ப்பு, உறவுகள் என பிரிக்க முடியாத மிக நெருக்கமான தொடர்பு இரு நகரங்களுக்கும் உள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காவிரி புதிய பாலத்தின் நுழைவாயிலில் மின்கம்பி உருளைகள் வைத்து மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரல் பரவலைத் தடுக்க ஈரோடு மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. இதனால், ஈரோடு மாவட்ட எல்லைகள் அணைத்தும் மூடப்பட்டதால் பவானி - குமாரபாளையத்தின் இரு பாலங்களும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து பாலங்கள் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, காவிரி ஆற்றின் பழைய மற்றும் புதிய பாலங்களில் நாமக்கல் மாவட்ட எல்லையிலும், ஈரோடு மாவட்ட எல்லையிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.