பொள்ளாச்சியில் கார் மோதி சிறுமி பலி
ஆழியாறுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்தார், 6 பேர் படுகாயமடைந்தனர்.
பொள்ளாச்சி: ஆழியாறுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்தார், 6 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், இடுவாய் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(வயது 40). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா(38), குழந்தை வர்ஷா(8) மற்றும் உறவினர்கள் துர்கா(28), இலக்கியா(22), சபரீஷ்(30), யுவராஜ்(34) ஆகியோருடன் ஆழியாறுக்கு திங்கள்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா வந்தவர்கள் ஆழியாரில் சாலையோரத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற புவனேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது மோதியது. இதில் சிறுமி வர்ஷா படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புவனேஸ்வரன் அவரது மனைவி பிரியா, துர்கா, இலக்கியா, சபரீஷ், யுவராஜ் ஆகியோர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த வால்பாறையை சேர்ந்த ரமேஷ்(42) என்பவரிடம் ஆழியாறு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ரமேஷ் தனது குடும்பத்தாருடன் வால்பாறையில் இருந்து அங்கலக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.