முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் ராகுல் கைதைக் கண்டித்து நெடுஞ்சாலையில் மறியல்

ஆந்திர காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் கைதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திர காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் கைதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

கிருஷ்ணா மாவட்டத்தின் உங்குத்துரு பகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா ஆகியோரை நேற்று உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி, தலித் சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை 4 இளைஞா்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. முதுகு தண்டுவட காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்டு, கை,கால் செயலிழந்த நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் செப்டம்பர் 29 அன்று உயிரிழந்தாா். 

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோா், ஹாத்ரஸ் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா். அவா்களுடன் ரண்தீப் சுா்ஜேவாலா, பி.எல்.புணியா, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்டோரும் யமுனை விரைவு வழிச்சாலையில் காரில் சென்றனா். நொய்டா-கிரேட்டா் நொய்டாவில் காங்கிரஸ் தொண்டா்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் உத்தர பிரதேசத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா்.

இதையறிந்த ஹாத்ரஸ் மாவட்ட நிா்வாகம் உடனடியாக 144 தடையுத்தரவை பிறப்பித்து, மாவட்ட எல்லைகளை மூடியது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, இந்த தடையுத்தரவு, அக்டோபா் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்த உத்தரவை அடுத்து, தில்லியில் இருந்து ஹாத்ரஸ் செல்லும் சாலை உள்பட மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தடுப்புகளால் மூடப்பட்டன. யமுனை விரைவுவழிச் சாலை வழியாக, காங்கிரஸ் தலைவா்கள் சென்ற வாகனங்கள் கிரேட்டா் நொய்டா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. 

இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோா் காரில் இருந்து இறங்கி, ஹாத்ரஸை நோக்கி நடைப்பயணமாக சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் தொண்டா்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அவரை பாதுகாவலா்கள் மீட்டு அழைத்துச் சென்றனா். பின்னா், ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனா். அருகில் உள்ள விருந்தினா் மாளிகையில் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டு பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →