மூன்று மாதத்தில் மக்களுக்கான ஆட்சி அமையும்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் இந்த ஆட்சி அகற்றப்படும். பின்னர் அமையக் கூடிய அரசு தான் உண்மையான மக்களுக்கான அரசாக அமையும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கோவில்பட்டி: தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் இந்த ஆட்சி அகற்றப்படும். பின்னர் அமையக் கூடிய அரசு தான் உண்மையான மக்களுக்கான அரசாக அமையும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின், என்னும் பிரச்சாரம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலை திட்டங்குளம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மேலும் பேசியது, திமுக 5 முறை தமிழகத்தில் ஆட்சி செய்து, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
சாதனைகளை பட்டியலிட்டால் நாள் முழுவதும் பட்டியலிட வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தை ஆளும் அதிமுக சாதனை பட்டியலிட முடியுமா? வேண்டுமென்றால் ஊழலை பட்டியலிடலாம். இந்தியாவிலேயே ஊழலுக்காக தண்டனை பெற்று முதல்வர் பதவியில் இருக்கும் போதே சிறைக்கு சென்றவரும் அதிமுக முதல்வராக இருக்க தான் முடியும்.
இதுபோன்ற தலைகுனிவை தமிழகத்திற்கு ஏற்படுத்தி கொடுத்த ஆட்சி தான் அதிமுக. இதுவரை இருந்த அரசுகளில் ஊழல் மலிந்த அரசு எது என்றால் 1991 - 1996 வரை நடந்த அதிமுக ஆட்சி தான். ஆனால் இப்போது அதையும் தாண்டி ஊழல் செய்கின்ற அரசு 2016 - 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மாறிவிட்டது.
தமிழக முதல்வர் பழனிசாமி முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல் ஒன்றையே தொழிலாக கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் மீதான வழக்கும், சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தலைமைச் செயலர் அலுவலகம், காவல்துறை தலைவர் வீடு ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்று முதல்வர் மீதும், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார், உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததில் முதல்வர் பழனிசாமி உள்பட அரை டஜன் அமைச்சர்கள் மீது புகார். மேலும் ஸ்மார்ட் சிட்டி, அண்ணா பல்கலைக்கழகம், முட்டை ஒப்பந்தம், கரோனா கால ஒப்பந்தம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையில் ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ரூ.2885 கோடிக்கு அவசர ஒப்பந்தம் விட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் தயவுசெய்து ஏமாற வேண்டாம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்தங்கள் விடப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கமிசன் ஏதும் இல்லாமல் முறையாக, நியாயமாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும். இது தான் தமிழக அமைச்சரவையின் அவலட்சணங்கள்.
ஊழல்வாதிகள் நிரம்பிய கேபினட். ஊழலுக்காக ஊழல்வாதிகள் நடத்தக் கூடிய ஊழல் கேபினட் இது. அவர் மீதும், அவரது அமைச்சர்கள் மீதும், ஆளுநரிடம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி புகார் வழங்கினோம். இதுவரை அதுபற்றி முதல்வர் பழனிசாமி பேசியுள்ளாரா? விளக்கமளித்துள்ளாரா? எந்த அமைச்சர்களாவது பதில் அளித்துள்ளனரா? மௌனம் சம்மதம் போல் தானே உள்ளனர்.
முதல்வர் பழனிசாமி உழைப்பவர் என தன்னைப் பற்றி அவரே பேசுகிறார். அவரது உழைப்பை தான் ஊரே பார்த்து சிரித்துக் கொண்டுள்ளது. அவர் என்னை பார்த்து நான் நடிக்கிறேன் என சொல்லிக் கொண்டுள்ளார். நடிக்க வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை. தேவையும் இல்லை. ஆட்சி முடியப்போவதால் விவசாயியாக நடிப்பது பழனிசாமி தானே தவிர, நான் அல்ல. நான் உழைத்து, தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தது, நாட்டு மக்களுக்கு தெரியும்.
திமுகவில் பல்வேறு பணிகள் ஆற்றி உள்ளேன். மக்கள் பிரச்சனைக்காக போராடி உள்ளேன். பல முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கினால் பாராட்டு பெற்றேன். இப்படி தியாகத்தால் ஆனது தான் ஸ்டாலின் வாழ்க்கை.
பழனிசாமியின் வாழ்க்கை வரலாற்றை பேசினால் தமிழகத்துக்கு அவமானம். என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. அடிமைப்படுத்த முடியாது என பழனிசாமி சொல்கிறார். இதனை அவர் புதுதில்லிக்கு சென்றிருந்த போது செல்லிருந்தால் பாராட்டலாம். பிப்.14ல் பிரதமர், தமிழகத்துக்கு வர உள்ளார். அப்போது பழனிசாமிக்கு துணிச்சல் இருந்தால் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
இன்னும் 3 மாதங்கள் தான், பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் பின்னர் அமையக் கூடிய அரசு தான் உண்மையான, மக்களுக்கான, மக்கள் விரும்பக் கூடிய உங்கள் அரசாக அமையும் என்றார் அவர்.
கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்டச் செயலர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், குமரகுருபரராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, கோவில்பட்டி நகரச் செயலர் கருணாநிதி, ஒன்றியச் செயலர் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், மாவட்டப் பொறியாளரணி துணை அமைப்பாளர் பீட்டர், மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மகளிரணி அமைப்பாளர் பிரேமாதுரைமுருகன், விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலர் சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் சண்முகராஜ், ராமானுஜகணேஷ், ரமேஷ் உள்பட வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.