சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 11 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 11 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு இன்று மாலை வருகை தந்தார். அவருக்கு ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து அளித்து வரவேற்பளித்தனர்.
இதனைத்தொடர்ந்து புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், அதிமுக இளம் பெண்கள் இளைஞர் பாசறை செயலாளர்கள் , தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோருடன் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் சட்டமன்ற தேர்தலில் பூத் வாரியாக நிர்வாகிகள் செயற்பட வேண்டிய விதம் மற்றும் பிரச்சாரம் குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பொன்னையன், மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
நான்காண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில் இன்று சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக வருகை தந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுக அலுவலகம் வருகை தந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் முதலமைச்சரை வாழ்த்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முதலமைச்சரின் சென்னை இல்லம் மற்றும் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்க இருந்த அதிமுக அலுவலகத்தில் முழுமையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த சால்வைகளும் பிரித்து பார்க்கப்பட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. முதலமைச்சர் வருகையையொட்டி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது