புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கவிதா ராமு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கு ஆட்சியராக இருந்த பி. உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சமூக சீர்திருத்தவாதி டாக்டர் முத்துலட்சுமி பிறந்த மாவட்டத்தில் பொறுப்பேற்றிருக்கிறேன். முதல்வர் நிறைய பணிகளை எங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்.
தொல்லியல் துறையில் பணியாற்றியபோது புதுக்கோட்டை அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. எனவே அது சார்ந்த சுற்றுலா வளர்ச்சிக்கும் கவனம் செலுத்துவேன்.
ஏற்கெனவே குழந்தைகள் வளர்ச்சித் துறையில் பணியாற்றியுள்ளதால் பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் தருவேன்.
அதேபோல வேளாண் முக்கியத்துவம் பெற்ற மாவட்டம் இது. விவசாயிகளின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை தருவேன் என்றார் கவிதா ராமு.
பொறுப்பேற்பின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.