விழுப்புரம் மாவட்டத்தில் உயர் கல்வி அமைச்சர் முனைவர் க.பொன்முடியிடம், புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் வந்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.51,000 திங்கள்கிழமை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியைச் சேர்ந்த ராஜி என்பவரது மகன் ஹரிபாஸ்கர் (28). இவர், நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவியுள்ளதால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதுடன், சுபநிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஏற்கெனவே, மே 17இல் திருக்கோவிலூரில் உள்ள ஒரு கோயிலில் ஹரிபாஸ்கர்-சாருமதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இத்திருமண நிகழ்ச்சி மிக எளிய முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் இத்தம்பதியினர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ.51,000-ஐ தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அவரிடம், இத்தம்பதியினர் ரூ.51,000-ஐ வழங்கினர்.
இந்த நிதியை பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.