முகப்பு
தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு: வரிசையில் காத்திருந்து வாக்களித்த ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேருராட்சிகளில் உள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,740 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Updated On : 19 பிப்ரவரி, 2022 at 11:30 AM
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 1-ஆவது வார்டு அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேருராட்சிகளில் உள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,740 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 679 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை(பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்(39 வார்டுகள்), ராசிபுரம்(27 வார்டுகள்), திருச்செங்கோடு(33 வார்டுகள்), பள்ளிபாளையம்(21 வார்டுகள்), குமாரபாளையம்(33 வார்டுகள்) ஆகிய 5 நகராட்சிகளும், ஆலம்பாளையம், அத்தனுர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனுர், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லுர், பொத்தனுர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், வெங்கரை, வெண்ணந்தூர் உள்ளிட்ட 19 பேருராட்சிகளும் உள்ளன. சேந்தமங்கலம், பரமத்திவேலுர், நாமகிரிப்பேட்டையில் தலா 18 வார்டுகளும், மீதமுள்ளவற்றில் தலா 15 வார்டுகளும் உள்ளன.

வாக்குச்சாவடிகள்: ஐந்து நகராட்சிகளில் மொத்தம் உள்ள 153 வார்டுகளில், நாமக்கல் நகராட்சியில் 22, 25 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 151 வார்டுகளுக்கு 365 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், 19 பேருராட்சிகளில் உள்ள 294 வார்டுகளில், பாண்டமங்கலத்தில் 4, பரமத்தியில் 1, பட்டணத்தில் 1 என 6 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள 288 வார்டுகளுக்கு 324 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 

Advertisement

இவற்றில் 74 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். மொத்தமாக 679 வாக்குச்சாவடிகளில் 439 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,740 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் 9 மணி வரை சற்று மந்தமாக இருந்த வாக்குப்பதிவு அதன்பின் விறுவிறுப்பு அடையத் தொடங்கியது. நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பொது மக்களோடு வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்திச் சென்றார். 

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 107 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.