தற்போதைய செய்திகள்

தினமணி இணையதள செய்தி எதிரொலி: சின்னப் பிள்ளைக்கு வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

DIN

சென்னை: தினமணி இணையதள செய்தி எதிரொலியாக, பத்மஸ்ரீ விருதாளர் சின்னப் பிள்ளைக்கு வீடு இல்லை என்ற வேதனையை அறிந்த முதல்வர் மு. க. ஸ்டாலின், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் உடனடியாக அவருக்கு வீடு வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற விழாவில், சுயஉதவிக்குழுக்களின் அடையாளமாகத் திகழும் மதுரை சின்னப்பிள்ளைக்கு 'ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் - மாதா ஜீஜாபாய்' விருது வழங்கியதுடன் அவரது காலிலும் விழுந்து வணங்கி, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

ஆனால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் 'அனைவருக்கும் வீடு' கட்டும் திட்டத்தில், வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து பட்டா கொடுத்த பின்னரும்கூட, இன்று வரை அதிகாரிகள் தனக்கு வீடு கட்டித்தரவில்லை என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கண்ணீர் மல்க தெரிவித்திருந்ததை மத்திய, மாநில அரசுகள் விரைந்து நிறைவேற்றும் என்று நம்புவோம் என உழைக்கும் உலக மகளிர் நாளையொட்டி தினமணி இணையதளத்தில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு வீடு இல்லை என்ற வேதனையை அறிந்த முதல்வர் மு. க. ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு உடனடியாக வீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், உடனடியாக பத்மஸ்ரீ விருதாளர் சின்னப் பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.

இதன்படி சின்னப் பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் சின்னப் பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT