மக்களவை6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லியில் 60,000 போலீசார்களும் ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தில்லி காவல்துறை லத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அமைதியான வாக்குப்பதிவினை உறுதிவிதமாக 60,000-க்கும் மேற்பட்ட காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தில்லி காவல் துணை ஆணையர்(தேர்தல் பிரிவு) சஞ்சய் செஹ்ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் எல்லைப் பகுதிகளில் நகரக் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் தவிர, 51 துணை ராணுவப்படைகளும், உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 13,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
”இதில், 2628 வாக்குச்சாவடிகளில் 429 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளண காணப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடுதல் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் கூறினர்.
கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் தில்லியின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், இந்த போட்டிக் களம், பாஜகவுக்கு சவாலாக உள்ளது. மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் இந்த கட்சி களத்தில் உள்ளது.
எதிரணியில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி ”2024 மக்களவைத் தேர்தலின் 6 ஆம் கட்டத் தோ்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் அதிகயளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பெண் வாக்காளர்கள் மற்றும் இளைஞர் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறும், மக்களவைத் தேர்தல் நடைமுறையில் ஈடுபாடுடன் இருக்கும்போதுதான் ஜனநாயகம் செழித்து வளர்கிறது” என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த 6ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தில்லியில் 7 தொகுதிகள், பிகாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஒரிசாவில் 6 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜௌரியில் 3ஆம் கட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட வாக்குப்பதிவு உட்பட 58 தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.