சிறப்புச் செய்திகள்

ஓ.பி.எஸ். யுத்தி வெற்றி பெறுமா?

DIN


அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்காமல் கட்சித் தலைமை அலுவலகத்துச் சென்று குழப்பங்களை உண்டாக்கியுள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் யுத்தி அவருக்கு பலன் கொடுக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் காலை 9.15-க்கு தொடங்க இருக்கிறது. பொதுக் குழு கூடலாமா வேண்டாமா என்கிற உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வின் தீர்ப்பு காலை 9 மணிக்கு வாசிக்க இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிற வானகரத்தைக் கடக்கும் பூந்தமல்லி, கோயம்பேடு சாலையை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. இரவிலேயே சில இடங்களில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதிலிருந்து, காலையில் என்ன நடக்கும் என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் பங்கேற்க ஓ. பன்னீர்செல்வம் மாற்றுப் பாதையைத் தேர்வு செய்து மண்டபத்தை முதலில் வந்தடைந்தார். எடப்பாடி பழனிசாமியோ போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி, தொண்டர்களின் வரவேற்புக்கு மத்தியில் பொறுமையாக மண்டபம் வந்தடைந்தார். இதனால், இன்றைய பொதுக் குழுவில் இருவரது வருகை எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் மறுபுறம் இருந்தது.

ஓ.பி.எஸ். மீண்டும் மாற்றுப் பாதை:

பொதுக் குழு நடைபெறும் மண்டபம் நோக்கி எடப்பாடி கே. பழனிசாமி புறப்பட்டார். ஆனால், ஓ. பன்னீர்செல்வம் பெரிதும் எதிர்பார்த்திராத வகையில் முற்றிலும் மாற்றுப் பாதையாக இந்த முறை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார்.

ஓ. பன்னீர்செல்வத்தினுடைய புறப்பாட்டின் விளைவு, தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது.

கல்வீச்சு, தாக்குதல், வாகனங்கள் சேதப்படுத்துதல் என அசாதாரண சூழலே அதிமுக தலைமை அலுவலகம் அருகே தென்பட்டது. காவல் துறையினர் தடியடி நடத்தி அதிமுக தொண்டர்களை விரட்டியடித்தனர்.

இருப்பினும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகம் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது, இந்த விவகாரம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்ததைக் குறிப்பிட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றியதாக செய்திகள் பகிரப்பட்டன.

இத்தனை களேபரத்துக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைகிறார்.

இதனிடையே, பொதுக் குழு நடைபெறுவதற்குத் தடையில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க, எடப்பாடி பழனிசாமி வருகைக்குப் பிறகு, செயற் குழுவைத் தொடர்ந்து, பொதுக் குழு கூடியது. செயற் குழுவில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கை அமைக்கப்பட்டும் அவர் வருகை தரவில்லை.

பிறகு, அனைவரும் எதிர்பார்த்தபடி, பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிப்பதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நாடகக் காட்சிகள் இத்துடன் முடியாமல் மேலும் நீடித்து, இந்தப் பக்கம் கட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, படங்களுடன் ஓ.பி.எஸ். படத்தை அவரது ஆதரவாளர்கள் வைக்க, ஓ.பி.எஸ். மேல் தளத்திலிருந்தபடியே கொடியசைத்து ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார். 

இதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட, எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

சீல்:

பொதுக் குழு மற்றும் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு நகர்வும் ஒன்றுக்கொன்று இணையாக அடுத்தடுத்து நகர, வானகரத்தில் பொதுக் குழு நிறைவுபெறும் நேரத்தில், வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டன.

கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு மண்டபத்திலிருந்து புறப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ. பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட பிறகு, அங்கிருந்துப் புறப்படுகிறார்.

ஜெயகுமார் மொழியில் சொல்லப்படும் 'ஒற்றைத் தலைமை நாயகன்' என்ற இலக்கை எடப்பாடி பழனிசாமி பொதுக் குழுவில் அடைந்துவிட்டார்.

அப்படியென்றால், பொதுக் குழுவிற்கு வருகை தராமல் தலைமை அலுவலகம் சென்ற ஓ. பன்னீர்செல்வத்தினுடைய இலக்குதான் என்ன? 

கட்சியின் அடுத்தகட்ட செயல்பாட்டை நோக்கி நகரக் கூடாது என்பதுதான் ஓ. பன்னீர்செல்வத்தின் திட்டமாகவும், வியூகமாகவும் இருக்கிறதா?

ஓ. பன்னீர்செல்வத்தினுடைய ஆதரவாளர்களின் செயலால்தான், ஓ. பன்னீர்செல்வத்தின் வருகையால்தான் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்திலிருந்து வெளியேறிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், கட்சியின் சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆக, பொதுக் குழு நடைபெறுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்காது, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார், தான் கட்சியிலிருந்து நீக்கப்படுவோம் என்பதையெல்லாம் முன்கூட்டியே அறிந்திருந்த காரணத்தினால்தான் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து, சீல் வைக்கச் செய்து, கோப்புகளை எடுத்துச் சென்று, குழப்பங்களை உண்டாக்கியிருக்கிறாரா ஓ. பன்னீர்செல்வம் என்கிற கேள்வி யதார்த்தமாக எழுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம் எப்போது, எவ்வாறு திறக்கப்படவுள்ளது? கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். என்ன செய்ய காத்திருக்கிறார்? வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது இன்னும் நீடிக்குமா?

கட்சியைத் தன்வசப்படுத்துவதற்கான ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த யுத்தி அவருக்குப் பலன் கொடுக்குமா?

காலத்தின் கையில் விடை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT