சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: புற்றுநோயின் மரபணுவை மாற்றும் ‘அரிசனம்’ எது தெரியுமா?

மரு.சோ.தில்லைவாணன்


இயற்கை நிறமிகளை மறந்ததால் இன்றைய உலகத்தை செயற்கை நிறமிகள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. அதென்ன செயற்கை நிறமிகள்? என்று தெரியாமலே பலரும் பயன்படுத்தி வருவது வாடிக்கையும், வேடிக்கையுமாக உள்ளது. இந்த செயற்கை நிறமிகள் தான் இன்றைய பல்வேறு நோய் நிலைகளுக்கு காரணம். 

முக்கியமாக உலகையே அச்சுறுத்தி வரும் தொற்றா நோயான புற்றுநோய்க்கு முக்கிய அடித்தளம். நாம் கலர் கலர்-ஆக பயன்படுத்தும் உணவு பொருட்கள் அல்லது உணவை அலங்கரிக்க பயன்படுத்தும் நிறச்சாயங்கள் அனைத்தும் செயற்கை நிறமிகள் தான் (உதாரணம்-கேசரியில் தூவும் நிறமிசாயம்). உணவில் மட்டுமா? இந்த செயற்கை நிறமி வேதிப்பொருட்கள்? மருந்துகளிலும் தான். 

பெரும்பாலான மருந்துகளில் சேரும் டார்ட்ராசின், மற்றும் எரித்ரோசின் ஆகிய செயற்கை நிறமூட்டிகள் புற்றுநோய்க்கு காரணமான டிஎன்ஏ எனும் நம் உடலின் மரபணுவை சிதைக்கும் தன்மையும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையும் உடையதாக ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. அதிலும் முக்கியமாக எரித்ரோசின் எனும் செயற்கை வேதி நிறமி குழந்தைகளுக்கான மருந்து மற்றும் இனிப்புகளில் சேர்க்கப்படுகின்றது. இதனால் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும், மேலும் தைராய்டு கட்டிகளையும் உருவாக்கும் என்றும் தரவுகள் கூறுகின்றது. 

“டாக்டர்.. எங்க குழந்தை இந்த கலரில் இருக்குற உணவை தான் விரும்பி சாப்பிடறா. அவங்களுக்கு இந்த கலர் தான் பிடிக்குது” என்று சொல்லும் பெற்றோர்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும், நம் குழந்தைகளுக்கு விருந்தை அல்ல, விஷத்தை தருகிறோம் என்று. நாட்பட்டு செயற்கை நிறமி அடங்கிய உணவு பொருட்களால், பல தொற்றா நோய்களும் தொற்றிக் கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் அதிமுக்கியமான ஒன்று தான் மரபணுவை சிதைக்கும் உயிர்கொல்லி நோய் ‘புற்றுநோய்’. 

சரி. இப்போது இயற்கை நிறமி என்ன? என்பது பலருக்கும் ஏற்படும் ஐயம். இயற்கையாகவே உணவு பொருள்களின் நிறத்திற்கு காரணமான நிறமிகள். உதாரணமாக பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைக்க பயன்படுத்தும் அஞ்சறைப்பெட்டி பொருள்கள் ஆகியவற்றின் இயற்கையான நிறம் தான். இவை பிளவனாய்டுகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

மாதுளை பழத்தின் நிறத்திற்கும், கேரட்,பீட்ரூட் நிறத்திற்கும் இயற்கை நிறமிகள் தான் காரணம். அந்த வகையில் அஞ்சறைப்பெட்டி சரக்குகளில் உள்ள முக்கிய இயற்கை நிறமிகள், செயற்கை நிறமிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் தன்மை உடையது. சிறந்த உதாரணம் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் ‘அரிசனம்’ அல்லது ‘மஞ்சள்’.

நம் நாட்டின் உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகளில் மஞ்சள் சேருகின்றது. மஞ்சள் தமிழர்களின் உணவு முறையிலும், மருத்துவ முறையிலும், வாழ்வியலோடும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு சித்த மருத்துவ மூலிகை. 

1280-ஆம் ஆண்டிலேயே, மார்கோ போலோ இந்த பொன்னிற மசாலா பொருளை பற்றி விவரித்தார், குங்குமப்பூவைப் போன்ற குணங்களைக் கொண்ட மஞ்சள் என்ற ஒரு எளிய காய்கறியினை பார்த்து ஆச்சரியப்பட்டார் என்கிறது வரலாறு.

உலக மக்களை ‘புற்றுநோய்’ எனும் கொடிய அரக்கனிடம் இருந்து காத்து வருவது தமிழ்நாடு தான் என்றால் மிகையல்ல. அத்தகைய பெருமைக்கும், உலக மக்களின் ஆரோக்கியத்திற்கும் நம் மாநிலம் அடித்தளமாக இருக்க காரணம், மஞ்சள் எனும் மாபெரும் சித்த மருத்துவ மூலிகையே. உலக அளவிலான உற்பத்தியில் 80 சதவிகிதம் இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட முதல் தரமான மஞ்சள் நம் நாட்டில் தான். அதுவும் ‘மஞ்சள் மாநகரம்’ என்ற பெருமைக்குரிய ‘ஈரோட்டில்’ தான். 

மஞ்சள் மூலிகை, தொற்று நோய்கள் எனப்படும் கிருமி நோய்கள், தொற்றா நோய்கள் எனப்படும் சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை பல்வேறு நோய் நிலைகளில் நல்லதொரு பலனை தரக்கூடியது. 

சித்த மருத்துவ தத்துவப்படி நோய்களுக்கு காரணம் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் ஏற்படும் மாற்றங்களே. மஞ்சளின் சிறப்பு என்னவெனில் இந்த மூன்றையும் சமநிலையில் வைக்கும் தன்மை இதற்குண்டு. இதனை “பின்னியெழும் வாந்தி பித்த தோடம் ஐயம் வாதம் போம்” என்ற அகத்தியர் குணவாகடவரிகளால் அறியலாம். முக்கியமாக புற்று நோயில் இந்த மூன்று குற்றங்களும் பாதிக்கப்படுகிறது. அத்தகைய நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் மூலிகை நல்ல பலன்  தரும். 

மஞ்சளில் நூறுக்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் உள்ளது. அதில் முக்கிய பங்களிப்பது டர்மெரோன் மற்றும் குர்குமினாய்டுகள். இவை இரண்டுமே புற்று நோயை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை வாய்ந்தது. மஞ்சளில் உள்ள குர்குமினாய்டுகளில் குர்குமின் 5-6 சதவிகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே இன்றைய புற்றுநோய் ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது.

மேலும் உடலுக்கு அவசியமான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், இரும்பு போன்ற தாது சத்துக்களும், தயாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் அமிலம் போன்ற விட்டமின்களும் நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இருதய நோய்கள் வராமல் காக்கும், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் α-லினோலெனிக் அமிலம் இவற்றையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் அதில் உள்ள மருத்துவ குணமுள்ள வேதிப்பொருள்களால் எண்ணிலடங்கா மருத்துவ தன்மை உடையதாக உள்ளது. அது புற்று நோயை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும், புற்றுக்கட்டிகளை கரைக்கும் தன்மையும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை காளான் போன்ற பல கிருமிகளை அழிக்கும் கிருமிக்கொல்லி தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும்,  ரத்த குழாய்களில் ரத்தகட்டி ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், இருதய பாதுகாப்பு, கல்லீரல் பாதுகாப்பு தன்மையும், சிறுநீரக செல்களுக்கு புத்துணர்ச்சி தரும் தன்மையும், வீக்கமுருக்கி செய்கையும், ஒவ்வாமையை நீக்கும் தன்மையும், அதி முக்கியமாக நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் உடையது குறிப்பிடத்தக்கது.

மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதிப்பொருள் பெருங்குடல் மற்றும் நுரையீரலில் அப்போப்டொசிஸ் எனும் திட்டமிட்ட புற்று செல்களின் இறப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு காரணமாகும் காக்ஸ், டிஎன்எப், இன்டெர்லூக்கின் போன்ற பல்வேறு புற்றுநோய் வளர்ச்சிக்கான காரணிகளையும், ரிஸப்டார்களையும் தடுத்து புற்றுநோய் வராமல் தடுப்பது மட்டுமின்றி, அந்நோயின் சிகிச்சையிலும் நல்ல பலனை தருவதாக உள்ளது. 

ஆக, சாதாரண நம் வீட்டு மஞ்சள், நம் உடலிற்கு ஆதாரமான மரபணு எனும் டிஎன்ஏ வரை சென்று மாற்றத்தை கொண்டு வருவது ஆச்சர்யத்திற்குரியது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட சித்த மருத்துவ மூலிகையான மஞ்சளை ஆன்மீகமாக மட்டும் பார்க்காமல், அறிவியல் கண்ணோட்டத்தோடும் பார்த்து பயன்படுத்த தொடங்கினால் புற்றுநோய் எனும் காலன் பிடியில் சிக்கினாலும் மீண்டு, மார்க்கண்டேயன் போல இளமையாக ஆரோக்கியமாக வாழ முடியும். 

மருத்துவ உலகத்திற்கே முன்னுதாரணம் நம் சித்த மருத்துவம். இது நமது பாரம்பரியம் மட்டுமல்ல. நமது ஆரோக்கியத்தின் அடையாளமும் கூடதான்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT