முகப்பு
சிறப்புச் செய்திகள்

கோம்பர் கழிவுப் பஞ்சு விலை உயர்வால் காட்டனுக்கு மாறும் ஓபன் எண்ட் மில்கள்!

கோம்பர் கழிவுப் பஞ்சு விலை உயர்வால் "ஓபன் எண்ட் மில்கள்' காட்டனுக்கு மாறி வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

கோம்பர் கழிவுப் பஞ்சு விலை உயர்வால் "ஓபன் எண்ட் மில்கள்' காட்டனுக்கு மாறி வருகின்றன.

தமிழகத்தில் கோவை, வெள்ளக்கோவில், பல்லடம், சோமனூர், உடுமலை, அன்னூர், அவிநாசி, ராஜபாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை மூலப்பொருளாக கொண்டும், பழைய பிளாஸ்டிக் பெட்பாட்டில் பைபர் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் கட்டிங் வேஸ்ட் ஆகியவற்றில் இருந்தும் 2-ஆம் நம்பர் கவுண்ட் முதல் 40-ஆம் நம்பர் கவுண்ட் வரை நூல் உற்பத்தி செய்யும் 600-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் இயங்கி வருகின்றன.

இந்த மில்கள் மூலம் தினசரி ரூ.60 கோடி மதிப்புள்ள 40 லட்சம் கிலோ கிரே மற்றும் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள விசைத்தறிகளில் கலர் நூல்களைக் கொண்டு ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜீன்ஸ் பேன்ட், பெட்ஷீட், லுங்கி, துண்டுகள், தலையணை உறை, மெத்தை விரிப்புகள், பாவாடைத் துணிகள், நைட்டீ உள்ளிட்ட பல்வேறு ரக துணிகள் தயாரிக்கப்படுகின்றன.

கழிவுப் பஞ்சு விலை அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் இருந்து மூலப்பொருள்களைப் பெறும் ஐரோப்பிய நாடுகள் ஜவுளிப் பொருள்களை அதிக லாபத்துடன் இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்வதாகவும் தொழில் துறையினர் கூறுகின்றனர்.

கழிவுப் பஞ்சு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக கூறும் தொழில் துறையினர், உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதம் இருந்தால் மட்டுமே கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது:

தமிழகத்தில் இயங்கி வரும் 600}க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்களில் 50 சதவீத மில்கள் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வரும் கழிவுப் பஞ்சை கொண்டு நூல் உற்பத்தி செய்து வருகின்றன. இதில் பல்லடம், ஈரோடு, சோமனூர், அவிநாசி பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு காட்டன் கிரே நூல்கள் அனுப்பப்பட்டு காடா துணி தயாரிக்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக காட்டன் விலை அதிகமானதால் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வரும் கழிவுப் பஞ்சு விலை அதிகரித்துள்ளது.

காட்டன் விலை ஒரு கண்டி (356 கிலோ) ரூ.1 லட்சத்து 3 ஆயிரமாக இருந்தபோது, கோம்பர் கழிவுப் பஞ்சு ஒரு கிலோ ரூ.125 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. தற்போது புதிய காட்டன் பருவத்தில் காட்டன் விலை ஒரு கண்டி ரூ.60 ஆயிரம் என்ற வகையில் கிலோ ரூ.168}க்கு  விற்கப்படுகிறது. அதே சமயம் கோம்பர் கழிவுப் பஞ்சு ஒரு கிலோ ரூ.140}க்கு விற்பனையாகிறது.

இதனால், பெரும்பாலான ஓபன் எண்ட் மில் நிர்வாகத்தினர் கழிவுப் பஞ்சு கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, காட்டன் கொள்முதல் செய்து 30 கவுண்ட், 40 கவுண்ட் நூல்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். 

ஏற்கெனவே கழிவுப் பஞ்சு விலை கட்டுப்படி ஆகாமல் பாலியஸ்டர், விஸ்கோஸ் காட்டன் பாலியஸ்டர் என செயற்கை நூல் உற்பத்திக்கு ஓபன் எண்ட் மில்கள் மாறி வருகின்றன.

கழிவுப் பஞ்சு விலை ஏற்றத்தால் ஓபன் எண்ட் மில்களும், விசைத்தறி கூடங்களும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. ஏற்கெனவே 50 சதவீதம் மட்டும் உற்பத்தி மேற்கொண்டு வந்த விசைத்தறிகளும், ஓபன் எண்ட் மில்களும் புத்தாண்டில் முழு உற்பத்தியைத் தொடங்க ஆயத்தமானபோது, கழிவுப் பஞ்சு விலை ஏற்றத்தால் புதிய நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஸ்பின்னிங் மில்கள் கழிவுப் பஞ்சு விலையை டிமாண்ட், சப்ளையை கருத்தில் கொள்ளாமல் காட்டன் வாங்கும் விலையில் 60 சதவீத விலைக்கு கழிவுப் பஞ்சை விற்க முன்வந்தால் மட்டுமே ஓபன் எண்ட் மில்களும், விசைத்தறிகளும் தங்கு தடையின்றி தொழிலை நடத்த முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.