தியாகியாகவே இருப்பாரா திருமாவளவன்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதும், கட்சியின் தலைவர் திருமாவளவனின் திருப்தியும் பற்றி...
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதுதானா? கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் கொஞ்சம் கலகலத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் ஓரளவு தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிந்து வேட்பாளர்கள் அறிவிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாகத் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, மஜக, கொங்கு இளைஞர் பேரவை என தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளில் கிட்டத்தட்ட இருபத்தி சொச்சம் அங்கம் வகிக்கின்றன.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு - தொகுதி பிரிப்பதில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், மஜக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனோ, மிகப் பெருந்தன்மையாக, ‘இது தியாகம் அல்ல; கடமை’ என வரும் தேர்தலில் நிபந்தனை இன்றி ஆதரவளிப்போம். ஆனால், போட்டியிடவில்லை என்ற கூறிவிட்டார் [கடந்த பேரவைத் தேர்தலில் 2.6 சதவிகிதம் வாக்கு (12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்) வாங்கியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த முறை யாருக்கு எதிராக கட்சி தொடங்கினாரோ அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கிறார். தற்போதைய பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால்தான் சொந்தச் சின்னமான ‘டார்ச் லைட்’டில் போட்டியிட முடியும், இல்லையென்றால் உதயசூரியனில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டதால் அவர் போட்டியிடாமல் விலகிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன].
கமலைவிட ஒரு படி மேலே சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், கேட்ட தொகுதி கிடைக்கவில்லை, திமுக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறோம் எனத் திடீரென வெளியேறினார்.
இது ஒருபுறம் இருக்க, 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெல்லாமல், வெறும் 0.4 சதவிகிதம் வாக்கு வங்கியைக் கொண்டுள்ள தேமுதிகவுக்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை திமுக தலைமை வாரிவழங்கியிருக்கிறது.
அதேநேரத்தில், 6 தொகுதிகளில் போட்டி, 4-ல் வெற்றி. வாக்கு சதவிகிதம் 1%. கூட்டணி தர்மத்தில் இது எந்த வகையில் நியாயம் என்று தோன்றினாலும், ஒருகாலத்தில், அதாவது 2011 ஆம் ஆண்டில், திமுகவைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்ததால் தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்திருக்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் 9 தொகுதிகள், 2011-ல் 10 தொகுதிகள், 2016-ல் 25 தொகுதிகள், 2021-ல் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் என்றால், இரண்டு எம்பிகளைக் கொண்ட விசிகவுக்கு 12 தொகுதிகள் கிடைத்திருக்க வேண்டும். அதனடிப்படையில், விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேர்தலில் 6 தொகுதிகளில் ஒதுக்கியதுபோல இரட்டை இலக்கத்தில் கேட்ட விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் சேர்த்து 6 தனித் தொகுதிகள் உள்பட 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
2011 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளிலும், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் விசிக தோல்வி அடைந்தது. 2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரத்தில் தனிச் சின்னத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் விசிக பொதுச் செயலர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக இல்லாமல், தமிழகத்தில் தனித்தியங்க முடியாத சூழலுக்கு விசிக தள்ளப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் பலரும் உணர்ச்சிவசப்படுகின்றனர்.
‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு’ என்ற கொள்கைகள் குறித்து பேசும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதிப் பங்கீட்டில் திமுக ஒதுக்கும் தொகுதிகளை ஒப்புக்கொள்வதை விசிகவினரே விமர்சிக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு, ஆட்சியில் இருந்த திமுகவைக் காட்டிலும் கூட்டணியில் இருக்கும் விசிக மீதும், கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆணவக் கொலைகள், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள், வேங்கை வயல் சம்பவம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மௌனம் காத்த திருமாவளவன் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
தொடக்கம் முதலே, சநாதன எதிர்ப்பு, சாதி, மதவாத மோதல்களை ஒடுக்க, ஆணவக் கொலை, மொழி உரிமை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் திமுகவுக்கு இணக்கமாக விசிக கட்சி இணக்கமாக செயல்பட்டாலும் அலைக்கழிக்கப்பட்டு ஒற்றை இலக்கத் தொகுதிகளைப் பெறும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
அதேசமயத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்த தேமுதிகவுக்கு பத்து தொகுதிகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், “விசிகவை ஆக்கிரமித்தாலும், திமுக ஒதுக்கிய தொகுதிகள் மனநிறைவைத் தருகின்றன. மதவாத சக்திகள் வேரூன்றுவதை, காலூன்றுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று திருமாவளவன் மனநிறைவுடன் கூறுகிறார்.
கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகளானாலும் “போராடியே தொகுதி பெற வேண்டிய சூழல் இருப்பதாகவும், நீண்டகாலமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் 10-க்கும் குறைவான தொகுதிகளைப் பெறப் போராட வேண்டியதாக” வேதனை தெரிவித்திருந்தார் திருமாவளவன்.
எதுவாயினும், 8 தொகுதிகளாக இருந்தாலும், திமுக இருநூறு தொகுதிகளில் வெற்றி பெறக் களத்தில் இறங்கி வேலை செய்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது 4 ஆக இருக்கும் எம்.எல்.ஏ.க்களை இரண்டு மடங்காகி (8 தொகுதிகளில்) வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்வார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.