டயானா ஷாஹூ
மோடி 3.0 மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு ஒடிஸா மாநிலம் பெரிய காரணமாக இருந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் சில மாநிலங்களில் எதிர்பார்த்த எண்ணிக்கையைப் பெற முடியாத பாஜகவுக்கு, ஒடிஸா மாநிலம் மொத்தமுள்ள 21 தொகுதியில் 20-ல் வெற்றியைக் கொடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலிலும், 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை வீழ்த்தி மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.
நவீன் பட்நாயக்கிற்கு நெருங்கியவரும், அவரின் தனிச் செயலாளராக இருந்து அரசியலுக்கு வந்தவருமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனுக்கு எதிராக பாஜக மேற்கொண்ட தீவிரமான தேர்தல் பிரசாரமும், மாநில மக்களின் விருப்பத்துக்குரிய தெய்வமான புரி ஜெகந்நாதர் கோவில் விவகாரத்தைக் கையிலெடுத்ததும் பாஜகவிற்கு ஒடிஸாவில் இத்தகைய வெற்றியைக் கொடுத்துள்ளது.
பிஜு ஜனதா தள அரசு கடந்த ஜனவரி மாதம் கோவில் வளாகத்தைப் புதுப்பிக்கும் திட்டத்தை (’ஸ்ரீ மந்திர் பரிக்ரமா திட்டம்’) தொடங்கிய நிலையில், அதனை எதிர்கொள்ளும் விதமாக புரி ஜெகந்நாதர் கோவிலின் நான்கு கதவுகளையும் திறப்பது மற்றும் காணாமல் போன ரத்ன பந்தரின் (கருவூலம் - பொக்கிஷ அறை) சாவியைக் கண்டெடுப்பது என்ற இரு பிரச்னைகளைக் கொண்டு பாஜக பிரசாரத்தை தீவிரப்படுத்தியது.
நரேந்திர மோடி முதல், அமித் ஷா, ஜெ.பி. நட்டா போன்ற அனைத்து பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக ஆட்சியிலிருக்கும் மாநில முதல்வர்கள் என அனைவரும் ஒடிஸாவில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு, ஜெகந்நாதர் கோவிலின் கடவுள்களான ஜெகந்நாதருக்கும், சுபத்திரா தேவிக்கும், பாலபத்ராவுக்கும் சாற்றப்படும் பண்டைய ஆட்சியாளர்கள் மற்றும் பக்தர்களால் வழங்கப்பட்டப் பாரம்பரியமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொண்டக் கருவூலமான ரத்ன பந்தரின் சாவியைக் குறித்துத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்கப்பட்ட சாவிகள் தொடர்பான பிரச்னை மீது தேர்தல் சமயத்தில் மீண்டும் மக்களின் கவனத்தைக் கொண்டு வந்தனர். கருவூலத்தின் உள் அறை 39 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. அதனுள்ளே இருக்கும் நகைகளின் மதிப்பு 46 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்டது. அதில், தற்போது எவ்வளவு நகை உள்ளது? எந்த நிலையில் உள்ளது? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
ரத்ன பந்தர் என்றால் என்ன?
புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலின் பக்தர்கள் தரிசிக்கும் வளாகமான ஜெகமோகனா பகுதியின் தெற்குப் புறத்தில் அமைந்துள்ள ரத்ன பந்தர் (கருவூலம்) 11.78 மீ உயரமும், 8.79 மீ x 6.74 மீ அகலமும் கொண்டதாகும். அதில், பஹாரா பந்தர் (வெளிப்புற அறை) மற்றும் பிதாரா பந்தர் (உள்புற அறை) எனும் இரு அறைகள் உள்ளன. ரத்ன பந்தரின் வடக்குப்பகுதிச் சுவர் ஜெகந்நாதர் கோவில் மற்றும் கருவூலத்தை இணைக்கும் பகுதியாகும். இந்தக் கோவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ரத்ன பந்தர் அதன் பின்னர் அமைக்கப்பட்டது. அதன் காலம் தெரியவில்லை.
ஜெகந்நாதர் கோவிலின் கலாச்சார வரலாறு குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் அந்தர்யாமி மிஷ்ரா கூறுகையில், “ஸ்ரீ ஜெகந்நாதரின் மீதான பக்தி பல அரசர்களை இந்தப் புனித பூமிக்கு வரவைத்துள்ளது. கேசரி மற்றும் கங்கா வம்ச அரசர்கள், சூர்யவம்சி மற்றும் போய் வம்ச அரசர்கள் முதல் நேபாள ஆட்சியாளர்கள் வரை, அனைவரும் தங்கம், வெள்ளி, வைரங்கள், பிற விலைமதிப்பற்ற கற்கள் போன்றவற்றை ஜெகந்நாதருக்கு நன்கொடையாக வழங்கினர்.
இந்தக் கோவிலின் சரித்திரமான மதலா பாஞ்சியில் கரூவூலத்தை நிறைத்த நன்கொடைகள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. கஜபதியைச் சேர்ந்த மன்னர் கபிலேந்திர தேவ், தென்மாநிலங்களை வென்றுவிட்டு 16 யானைகளில் ஏற்றி வந்த தன்னிடமிருந்த மொத்த நகைகள் மற்றும் சொத்துகளைக் கோவிலுக்கு தானமாகக் கொடுத்ததாகக் கோவிலின் ஜெய-விஜய கதவுகளின் அருகில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோவில், அந்தக் காலத்தில் எந்தளவு புகழ்மிகுந்து விளங்கியது என்றால், காலா ஃபகத் உள்பட இந்துக்கள் அல்லாத படையெடுப்பாளர்கள் 18 முறை கோவிலைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்” என்று அவர் கூறினார்.
ஒடிஸாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அப்போதைய பூரி கலெக்டர் சார்லஸ் குரோம் முன்னிலையில் ரத்ன பந்தரின் முதல் விரிவான அதிகாரப்பூர்வ விவரங்கள் 'ஜெகந்நாதர் கோவில் அறிக்கை' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இது ஜூன் 10, 1805 அன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட 64 தூய தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதவிர, 128 தங்க நாணயங்கள், 24 வெவ்வேறு வகையான தங்க முத்திரைகள், 1,297 வெள்ளி நாணயங்கள், 106 செப்பு நாணயங்கள் மற்றும் 1,333 வகையான ஆடை ஆபரணங்கள் கணக்கிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 1926-ம் ஆண்டு பூரி ஆட்சியர் அலுவலகத்தின் பதிவு அறையில் பூரி மன்னரின் அனுமதியுடன் நகைகளின் பட்டியல் வைக்கப்பட்டது.
1952-ம் ஆண்டில், ஸ்ரீ ஜெகந்நாதர் கோவில் நிர்வாகச் சட்டம் மற்றும் விதிகளின் படி, கோவில் உரிமைகள் குறித்த பதிவு (ஆர்.ஓ.ஆர்.) தயாரிக்கப்பட்டது. அதில், மற்ற உரிமைகளுடன் நகைகள் மற்றும் தெய்வங்களின் ஆபரணங்கள் பட்டியல் விவரங்களும் சேர்க்கப்பட்டது. அதில் பஹாரா பந்தரில் உள்ள 150 தங்க ஆபரணங்கள் மற்றும் பிதாரா பந்தரில் உள்ள 180 வகையான 100 தோலாக்கள் எடையுள்ள நகைகள் (ஒரு தோலா=1.6638 கிராம்) மற்றும் 146 வெள்ளிப் பொருள்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டதாக புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாத் கபேசன பிரதிஸ்தான் தலைவரும், ஆய்வாளருமான சுரேந்திரநாத் தாஸ் கூறியுள்ளார்.
நகைகளை நிர்வகிக்கும் சட்டங்கள் மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் சட்டம், 1954 (ஒடிஸா சட்டம் 11, 1955) பிரிவின் 35 இன் கீழும், 1960 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெகநாதர் கோயில் விதிகளின் கீழும், ரத்னா பந்தரின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு, ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகக் குழுவிடம் உள்ளது. கருவூலத்தில் உள்ள நகைகள் மூன்று பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு 1 - பிதாரா பந்தரில் வைக்கப்பட்டுள்ளவை ஒருபோதும் பயன்படுத்தப்படாத ஆபரணங்கள் மற்றும் நகைகள்.
பிரிவு 2 - விழாக்கள் அல்லது பண்டிகை சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் நகைகள்.
பிரிவு 3 - மூன்று கடவுள்களின் தினசரி பயன்பாட்டிற்கான நகைகள்.
1960 விதிகள், பிரிவு 1 -ல் உள்ள நகைகள் இரட்டைப் பூட்டுகளுக்குள் இருக்கும் என்றும், சாவிகள் நிர்வாகத்தால் அரசு கருவூலத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. மாநில அரசின் சிறப்பு உத்தரவுப்படி மட்டுமே பூட்டுகள் திறக்கப்படும்.
பிரிவு 2-ல் உள்ள நகைகளும் இரட்டை பூட்டுகளின் கீழ் வைக்கப்படும். ஒரு திறவுகோல் கோவில் நிர்வாகியிடம் இருக்க வேண்டும், மற்றொன்று பட்ஜோஷி மகாபத்ராவிடம் (அனைத்து சேவகர்களின் தலைவர்) இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பிரிவு 3-ல் உள்ள நகைகளும் ரத்ன பந்தருக்குள் பூட்டு போடப்பட்டிருக்கும், அதன் சாவி தெய்வங்களின் ஆபரணங்கள் பராமரிப்பவரிடம் இருக்கும் என்றும், அவர் எப்போதும் நிர்வாகத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பிதாரா பந்தர் (உள்புற அறை) அறையின் கடைசி இருப்புப் பட்டியல் 1960-ல் கோவில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்ட போதிலும், சன்னதியின் அனைத்து நிலைகளிலும் குறைபாடுகள் காணப்பட்டது. இதனால், மாநில அரசு 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒடிஸா ஆளுநர் பி.டி. சர்மா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு கோவில் நிர்வாகம் மற்றும் அதன் சொத்துகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைக்கானப் பரிந்துரைகளை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.
அந்தக் குழு 1978-ம் ஆண்டு மே 13 முதல் ஜூலை 23 வரை ரத்ன பந்தரின் நகைப் பட்டியலைத் தயார் செய்தது. கருவூலத்தின் இரு அறைகளிலும் மொத்தம் 12,838 பாரி (1 பாரி =10 கிராம்) எடையுள்ள 454 தங்கப் பொருள்களும், 22,153 பாரி எடையுள்ள 293 வெள்ளிப் பொருள்களும் இருப்பது பட்டியலிடப்பட்டது. இதில், பிதாரா பந்தரில் 4,364 பாரி எடையுள்ள 367 தங்கப் பொருட்கள் மற்றும் 14,878 பாரி எடையுள்ள 231 வெள்ளி பொருட்கள் உள்ளன.
பஹாரா பந்தரில், பிரிவு 2-ல் உள்ள நகைகளில் 8,175 பாரி எடையுள்ள 79 தங்கப் பொருள்களும், 4,671 பாரி எடையுள்ள 39 வெள்ளிப் பொருள்களும், பிரிவு 3-ல் உள்ள நகைகளில் 299 பாரி எடையுள்ள 8 தங்க நகைகளும், 2,693 பாரி எடையுள்ள 23 வெள்ளி நகைகளும் இருந்தன.
மதிப்பீடு செய்யப்படவில்லை
பெரும்பாலான ஆபரணங்களில் பதிக்கப்பட்ட நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்களை மதிப்பிடுவதற்காக, 1978-ல் ஒடிஸா ஆளுநர் சர்மாவின் வேண்டுகோளின் பேரில் அப்போதைய தமிழக ஆளுநர், தமிழ்நாட்டில் இருந்து நான்கு புகழ்பெற்ற நகை மதிப்பீட்டாளர்களை ஏற்பாடு செய்தார். ஆனால், பிதாரா பந்தரிலுள்ள நகைகளை ரத்ன பந்தரின் எல்லைக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி இருப்பதால், அவை மதிப்பீடு செய்யப்படவில்லை.
”கருவூலம் ஒரு இருட்டு அறை. அது விளக்குகள் மற்றும் நெருப்புக் பந்தங்களால் ஒளிர வைக்கப்படும். நகைக் கடைக்காரர்களுக்கு தரத்தை சரிபார்க்க வெளிச்சம் தேவைப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவற்றை வெளியில் எடுத்துச் செல்ல முடியாததால், மதிப்பீடு செய்யப்படவில்லை” என்று அப்போதைய கோயில் பதிவேடுகளை நிர்வகிக்கும் தாஸ் என்பவர் கூறினார்.
கடைசியாகக் கருவூலத்துக்குள் மதிப்பீடுக்காக நுழைந்தது 1978-ம் ஆண்டு என்றாலும், நிர்வாகக் குழு அதிகாரிகள் பிதாரா பந்தருக்குள் நுழைந்தது அதுவே கடைசி முறை அல்ல. அவர்கள் 1982 மற்றும் 1985 இல் இரண்டு முறை கருவூலத்தின் உள்ளே சென்றார்கள்.
கோயில் பதிவுகளின்படி, டிசம்பர் 26, 1982 அன்று, 3,337 பாரி மற்றும் 10 அன்னா (16 அன்னா= 1 பாரி) வெள்ளி நகைகள், பிதாரா பந்தரிலிருந்து கர்ப்ப கிரகத்தின் பிரதான கதவுக்கு வெள்ளி உறைத் தயாரிக்க எடுக்கப்பட்டது. பின்னர், ஜூன் 14, 1985 அன்று, பாலபத்ரரின் தங்க 'சிட்டாவைப்' பழுதுபார்க்க உள் அறையிலிருந்து 1,113 பாரி மற்றும் 7 அன்னா தங்கம் எடுக்கப்பட்டது.
“பிதாரா பந்தர், ஆபரணங்களை பழுதுபார்ப்பதற்கும், மூன்று கடவுள்களுக்கும் புதிய நகைகளைச் செய்வதற்கு தங்கம் அல்லது வெள்ளி தேவைப்படும்போது மட்டுமே திறக்கப்பட வேண்டும். ஆனால் மதிப்புமிக்க பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தத் திறப்பது தப்பில்லை” என்று மிஸ்ரா கூறினார்.
காணாமல்போன சாவிகளின் மர்மம்
ரத்ன பந்தரின் கட்டமைப்பு பாதுகாப்பு குறித்தப் பிரச்னைகளுக்கு இடையே, கருவூலத்திற்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி தேவையா இல்லையா என்பதை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறையை (ஏஎஸ்ஐ) அனுமதிக்குமாறு, ஸ்ரீ ஜெகந்நாதர் கோவில் நிர்வாகத்திற்கு (எஸ்ஜேடிஏ) ஒடிஸா உயர் நீதிமன்றம் மார்ச் 22, 2018 அன்று உத்தரவிட்டது.
அதன்படி, 17 பேர் கொண்ட குழு மார்ச் 26, 2018 அன்று ரத்ன பந்தரை ஆய்வு செய்தது. ரத்னா பந்தரின் உள் அறைக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதால், கமிட்டி அதை வெளியில் இருக்கும் இரும்பு கம்பிகள் இடையே பார்த்து, அதன் மூலம் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்று ஏஎஸ்ஐ கூறியது. ரத்ன பந்தரின் உள் அறையின் சாவி கொண்டு செல்லப்பட்டாலும், உள் அறையின் அனைத்துப் பகுதிகளும் கம்பிகள் வழியாகத் தெரியும் என்பதால் அதைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அப்போதைய கோவில் தலைமை நிர்வாகி பிரதீப் ஜெனா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பின்னர் ஆய்வு முடிந்த உடன், உள் அறையின் சாவியைக் காணவில்லை என்று அப்போதைய மாவட்ட நீதிபதி அரவிந்த் அகர்வால் தெரிவித்ததால் கோவில் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டது. உயர்நீதிமன்றம் கோவிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட பின், கோவில் நிர்வாகம் 1960 விதிகளின்படி அரசுக் கருவூலத்திலிருந்து சாவிகளைத் தருமாறு கோரிக்கை வைத்தது. ஆனால் சாவி அங்கு இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அங்குள்ள மாவட்டப் பதிவாளர் அறையில் ரத்ன பந்தரின் ’மாற்றுச் சாவி’ கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிபதி அகர்வால் தெரிவித்தார். அது 1985 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தின் முத்திரையுடன், 'பிதாரா பந்தரின் மாற்றுச் சாவி' என்ற குறிப்பிடப்பட்டு சீல் செய்யப்பட்ட உறையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ”மாற்றுச் சாவி எப்படி, ஏன் தயாரிக்கப்பட்டது என்பது இன்னும் பதிலளிக்கப்படாதக் கேள்வியாக உள்ளது,” என்று மிஸ்ரா கூறினார்.
அதன்பின் நடந்தவை
இந்த சம்பவம் ஏற்படுத்திய சலசலப்பைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக், சாவி காணாமல் போனது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒடிஸா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபீர் தாஸ், ஜூன் 8, 2018 அன்று தனிநபர் விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 29, 2018 அன்று, நீதிபதி தாஸ் ஒரு பெரிய அறிக்கையை சமர்ப்பித்தார். ஆனால் நவீன் பட்நாயக் அரசு அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவில்லை.
கடந்த பிப்ரவரியில், ரத்ன பந்தரில் உள்ள மதிப்புமிக்க பொருள்களை புதிதாக மேற்பார்வையிட்டு இருப்புப் பட்டியல் தயாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையில் நவீன் பட்நாயக் மற்றொரு குழுவை அமைத்தார். வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ள ரத யாத்திரையின் போது பணியைத் தொடங்க அந்தக் குழு முடிவு செய்திருந்தது.
தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தனர். பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் அதை நிறைவேற்றும் என்று அமித்ஷா அறிவித்திருந்தார். கரோனா தொற்று காரணமாகக் கோவிலின் மூன்று வாசல்கள் அடைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகப் பிரதான வாசல் மட்டுமே திறந்திருந்தது. இது பாஜகவின் பிரசாரத்தில் எதிரொலித்தது. தற்போது ஆட்சியமைத்த பாஜக அரசு முதல் நாளே கோவிலின் நான்கு வாசல்களையும் திறந்து விட்டது.
பாஜக அரசின் வெளிப்படைத்தன்மையைக் காட்ட ரத்ன பந்தரின் காணாமல் போன சாவிகள் பற்றிய 2018-ம் ஆண்டு அறிக்கை மக்களிடையே வெளியிடப்படுமா என்பதையும், காணாமல் போன சாவியின் மர்மம் அகலுமா என்பதையும் இனிமேல் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வாசல்கள் ஏன் மூடப்பட்டன?
கரோனா தொற்றுப் பரவலின் போது 2020-ல் மூடப்பட்ட கோவில் வாசல்கள் மீண்டும் திறக்கப்படும்போது, நான்கு கதவுகளும் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறியபோதும், பிரதான வாயிலான சிங்கதுவாரா மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்பட்டது.
4 ஆண்டுகளாக மற்ற வாசல்கள் திறக்கப்படாததால் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அவதிப்பட்டனர். இதனால் உள்ளூர் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இது பின்னர் தேர்தல் பிரச்னையாக மாற்றப்பட்டது.
காலவாரியான இருப்புப் பட்டியல் தயாரிப்புகள்
1805
அப்போதைய புரி ஆட்சியர் சார்லஸ் குரோம், ரத்னா பந்தரில் 64 தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இருக்கிறது என்றும், அதுபோக, ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
1926
ரத்னா பந்தரில் உள்ள நகைகளின் பட்டியல் புரி மகாராஜாவால் சரிபார்க்கப்பட்டு, புரி ஆட்சியர் அலுவலகத்தின் பதிவு அறையில் வைக்கப்பட்டது
1952
கோவிலின் உரிமைகள் குறித்த பதிவு தயாரிக்கப்பட்டு அதில், பஹாரா பந்தரில் 150 தங்க நகைகளும், பிதாரா பந்தரில் 180 தங்க நகைகள் மற்றும் 146 வெள்ளிப் பொருட்கள் இருப்பதும் குறிப்பிடப்பட்டது.
1962
அப்போதைய நிர்வாகி எல்.என். மிஸ்ராவால் மார்ச் 1962 முதல் ஆகஸ்ட் 1964 வரை ரத்னா பந்தரில் நகை சரிபார்ப்புப் பணி தொடங்கப்பட்டது. கருவூலத்தில் இருந்த 602 நகைகள் சரிபார்க்கப்பட்டன. இருப்பினும், கோயில் நிர்வாகக் குழு மற்றொரு முறை சரிபார்க்கும் பணிக்குக் கோரிக்கை விடுத்தது.
1967
மே மாதம், கோவில் கமிட்டி உத்தரவுப்படி, மற்றொரு சுற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் 433 பொருட்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டன. நகைகள் குறித்த ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை.
1978
ஒடிசாவின் அப்போதைய கவர்னர் பி டி சர்மா மே 13 முதல் ஜூலை 23 வரை கருவூலத்தின் இருப்புப் பட்டியலைத் தயார் செய்தார். அவர் மூலம் கருவூலத்தின் இரு அறைகளிலும் 454 தங்க நகைகளும், 293 வெள்ளி நகைகளும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது.
2018
மார்ச் மாதம், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, தொல்லியல் துறை, ரத்னா பந்தரின் உள் அறைக்குள் நுழையாமல் ஆய்வு செய்தது. அப்போதைய, புரி கலெக்டர் உள் அறையின் சாவியை காணவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாவட்ட பதிவாளர் அறையில் ரத்ன பந்தரின் மாற்றுச் சாவி கிடைத்ததாக ஆட்சியர் கூறினார். ஒரு சீல் செய்யப்பட்ட உறையில் சாவி இருந்தது என்றும், அதில் ‘பிதாரா பந்தரின் மாற்றுச் சாவிகள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
2024
பிப்ரவரியில், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையில் 1978 ஆம் ஆண்டுக்கு பிறகு, தற்போது மீண்டும் ரத்ன பந்தரின் புதிய நகைகள் இருப்புப் பட்டியலை உருவாக்க ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார்.
(தமிழில்: ஜெகதீஸ் வள்ளிவேல்ராஜன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.