சர்வசாதாரணமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் இருமல் மருந்தினால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயதுடைய 14 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளையும் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த 'கோல்ட்ரிஃப்'(coldrif) எனும் இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறி, இந்த மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டில் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் அந்த மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவர் சோனி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இந்த 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து பல மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன.
பெயிண்ட், மை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனப்படும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் கலக்கப்பட்டுள்ளதும் அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி, இருமலுக்கு மருந்துகள்...
குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளி, இருமல் ஏற்படுவது சாதாரணமானதுதான். அந்த காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமலைப் போக்க இயற்கையான வீட்டுச் சமையல் பொருள்களைப் பயன்படுத்தியோ பச்சிலைகளைப் பயன்படுத்தியோ கஷாயம் கொடுப்பார்கள்.
ஆனால் ,இப்போதோ குழந்தைகளுக்கு சளி, இருமல் என்றாலே உடனடியாக மருத்துவர்களிடம்தான் செல்கிறார்கள். மருத்துவர்களும் சளிக்குத் தனியாகவும் இருமலுக்குத் தனியாகவும் காய்ச்சலுக்கு தனியாகவும் வெவ்வேறு மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். அதேபோல ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மருந்தைப் பரிந்துரைக்கிறார்கள். இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.
இருமல் மருந்து உயிரிழப்புகள்
இந்தியாவில் இப்போது 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு முன்னதாக 'டைஎத்திலீன் கிளைகால்' கலந்துள்ள மருந்தால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன தெரியுமா?
அமெரிக்காவில் 1937ல் 105 குழந்தைகள் உயிரிழந்ததுதான் முதல் சம்பவம். சோதனையில்லாமல் மருந்துகள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட காலம் அது. 1938ல் சட்டத்தின் மூலம் அதை அமெரிக்கா மாற்றியது. முறையான சோதனைக்குப் பிறகே அங்கு மருந்துகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. அந்த சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இருமல் மருந்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஆனால், இந்தியாவில் வளர்ச்சி பெற்ற காலகட்டத்தில் இப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், இது மட்டுமல்ல; இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 143 குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
2020 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் டைஎத்திலீன் கிளைகால் கலந்த மருந்தினால் 12 குழந்தைகள் இறந்துள்ளனர். 2022 ஆகஸ்டில் உஸ்பெகிஸ்தான் 65 குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தே காரணம் என்று கூறப்பட்டது. அதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு, காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததற்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டைஎத்திலீன் கிளைகால் கலந்த இருமல் மருந்தே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது. இருமல் மருந்தினால் மொத்தமாக 143 குழந்தைகள் உயிர்போனது.
அதற்கு முன்பாக 1986ல் மும்பையில் 14 குழந்தைகள், குருகிராமில் தயாரிக்கப்பட்ட ஒரு இருமல் மருந்தினால் 1998ல் தில்லியில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட 150 குழந்தைகளில் 33 குழந்தைகள் இறந்தனர்.
மருந்து தயாரிக்கும் செலவைக் குறைப்பதற்காக இருமல் மருந்தில் கலக்கப்படும் டைஎத்திலீன் கிளைகால் கலவையால் மதிப்புமிக்க குழந்தைகளின் உயிர்கள் பலியாகின்றன.
அதிகாரிகளின் அலட்சியம்...
மற்றொரு முக்கிய காரணம் அதிகாரிகளின் அலட்சியம். சமீபத்தில் மொத்தம் 19 இருமல் மருந்துகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் 9 மருந்துகளை மட்டுமே அதிகாரிகள் பரிசோதித்து அறிக்கை தந்துள்ளனர்.
உஸ்பெகிஸ்தான், காம்பியா விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் தற்போது செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. காம்பியா பலியில் சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த ஆண்டே தயாரிப்பு உரிமத்தை மீண்டும் பெற்றது. உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலி விவகாரத்தில், நிறுவனம் இந்தாண்டு தனது தயாரிப்பைத் தொடங்கியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் உலக நாடுகளிடையே இந்தியாவின் மருந்துகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதுடன் இந்தியாவிலும் தொடர்ந்து குழந்தைகள் பலியை ஏற்படுத்தி வருகின்றன.
டைஎத்திலீன் கிளைகால்
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன நச்சு கரைப்பான், பிரேக் திரவங்கள், ரெசின், டை உள்ளிட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கிளிசரின் அல்லது ப்ரொபிலின் கிளைகால் நிறமற்ற, வாசனையற்ற மற்றும் தண்ணீரில் கரையும் தன்மை கொண்டது. திரவங்களை அடர்த்தியாக்கப் பயன்படுகிறது. இனிப்பு சுவையுடன் அடர்த்தி மிக்கதாக இருக்கும். இதுவே மருந்துகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த கிளிசரினைவிட டைஎத்திலீன் கிளைகால் விலை குறைவானது என்பதால் மருந்துகளைத் தயாரிக்க இதனைப் பயன்படுத்துகின்றனர்.
டைஎத்திலீன் கிளைகாலும் நிறமற்ற, வாசனையற்ற, இனிப்பான, அடர்த்தியான திரவமாகும்.
டைஎத்திலீன் கிளைகால் கலப்பதால் சிறுநீரகம் செயலிழப்பதுடன் நிரந்தர உடல் குறைபாடுகள் அல்லது மரணம்கூட ஏற்படலாம். குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்தாலும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மத்தியப் பிரதேச விவகாரம்
மத்தியப் பிரதேச விவகாரத்தில் முதல் குழந்தை உயிரிழப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்துள்ளது. ஆனால் இரு வாரங்களுக்கு பிறகு 7-8 குழந்தைகள் உயிரிழந்த பிறகே அதிகாரிகள் இதுகுறித்து பேசத் தொடங்கினர்.
முதல் குழந்தை இறப்பு ஏற்பட்டவுடனே அந்த இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் அடுத்தடுத்த வாரங்களில் ஏற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிலும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த விவகாரத்தில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, 'இருமல் மருந்து பாதுகாப்பானதுதான், கலப்படம் எதுவும் இல்லை' என்று கூறி கிட்டத்தட்ட இந்த விஷயத்தை நிராகரித்துவிட்டன.
ஆனால், தமிழக அரசு செய்த பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்த பிறகே, இருமல் மருந்தில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இந்த மருந்திற்கு தடை விதிக்கப்பட்ட பிறகே மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகின்றன,
ராஜஸ்தானில் பரிசோதனையில் தரமற்ற மருந்துகளை வழங்கிய நிறுவனம், தற்போது மாநில அரசின் இலவச மருந்துகளின் கீழ் இருமல் மருந்தை வழங்கி வருகிறது. இதுபோன்று தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த நிறுவனங்கள் தற்போதும் விநியோகத்தைத் தொடர்ந்து வருகின்றன.
தர பரிசோதனை அவசியம்..
ஒரு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக தர பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனைகள் முறையாக இல்லாததாலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் அலட்சியத்தாலுமே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்தியா மட்டுமின்றி சமீபமாக பனாமா, சீனா, ஹைட்டி, வங்கதேசம், ஆர்ஜென்டினா, நைஜீரியா போன்ற நாடுகளிலும் இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் மக்களிடையே பயன்பாட்டில் உள்ள மருந்துகள் குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் / பரிந்துரைக்கப்படும் இருமல் மருந்துகள் பாதுகாப்பானவையா என எந்த பாரபட்சமும் இன்றி தர பரிசோதனை செய்யப்பட வேண்டும். சொற்ப லாபத்திற்காக குழந்தைகளின் உயிருடன் விளையாடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் இந்த சோகம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இருமல் என்றால், மருந்து கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை மருத்துவரிடம் கேட்டறிவதுடன் மட்டுமல்ல; மருந்து கொடுத்தேயாக வேண்டுமா? என்பதையும் உறுதி செய்துகொண்ட பிறகு கொடுப்பது நல்லது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.