மீண்டும் ஒளிபரப்பில் ஜிம்மி கிம்மெல்... AP
சிறப்புச் செய்திகள்

மக்களால் மாற்றப்பட்ட முடிவு! டிரம்ப்பை விமர்சித்ததால் நிறுத்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சி மீண்டும் தொடக்கம்!

அதிபர் டிரம்ப் பற்றிய விமர்சனம் காரணமாக அச்சுறுத்தி நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி, மக்கள் காட்டிய மௌன எதிர்ப்பால் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியது பற்றி...

ததாகத்

(அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான) “சார்லி கிர்க்கைக் கொன்ற இந்தச் சிறுவனை, விரக்தியான மனநிலையில், தங்களில் ஒருவராக அல்லாமல் வேறு யாரோ ஒருவராகச் சித்திரிக்க ‘மகா’ (மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்) – கூட்டம் முயலுகிறது. அந்தக் கொலையிலிருந்து அரசியல் லாபங்களைப் பெற முயற்சிக்கிறது.”

“சார்லி கிர்க்கைச் சுட்டுக்கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள டைலர் ராபின்சன், (ஏற்கெனவே) டிரம்ப்பின் ‘மகா’ இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்.”

அமெரிக்காவிலுள்ள ஏபிசி தொலைக்காட்சியில் ‘ஜிம்மி கிம்மெல் லைவ்’ என்ற நகைச்சுவை – அரட்டையடிக்கும் அரங்கம் மாதிரியான - கலந்துரையாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கடந்த வாரத்தில் திங்கள்கிழமை பின்னிரவு, இந்தக் கருத்தைத் தெரிவித்தவர் புகழ்பெற்ற ஜிம்மி கெம்மல்.

2003 ஆம் ஆண்டு முதல் இந்த அரட்டை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் ஜிம்மி கெம்மல். அமெரிக்காவிலும் அமெரிக்காவுக்கு வெளியேயும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள். நான்கு முறை ஆஸ்கர் விருது வழங்குவிழாக்களைத் தொகுத்தளித்திருக்கிறார்.

கிர்க்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற அரசு அறிவிப்பைப் பற்றிக் குறிப்பிட்டதுடன், கொலை பற்றிய அதிபர் டிரம்ப்பின் எதிர்வினையையும் நகைச்சுவையாக - தன்னுடைய நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் ஒருவருடைய மரணத்துக்காக ஒரு பெரிய மனிதர் இரங்கல் தெரிவிப்பதைப் போல இல்லை; ஏதோ தங்கமீனுடைய மறைவுக்காக நான்கு வயதுச் சிறுவன் செய்வதைப் போல இருக்கிறது – என்று டிரம்பையும் விமர்சித்தார் கிம்மெல். (இத்தனைக்கும் சார்லி கிர்க் கொல்லப்பட்ட நாளில் இன்ஸ்டாகிராமில் கொலையைக் கண்டனம் செய்ததுடன், குடும்பத்துக்கு அன்பையும் தெரிவித்துப் பதிவிட்டவர்தான் கிம்மெல்).

உடனே, அதிபர் டிரம்ப் வட்டாரத்தில் பெரும் புகைச்சல்.

கிம்மெல் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததற்காக ஏபிசி தொலைக்காட்சி மற்றும் அதன் தாய் நிறுவனமான டிஸ்னி ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்; ஒளிபரப்பு உரிமம் ரத்து செய்யப்படலாம் என, ஒளிபரப்பு ஒழுங்கமைப்பான அரசு ஒளிபரப்பு கமிஷனின் தலைவர் பிரெண்டன் கர் (டிரம்ப்பினால் நியமிக்கப்பட்டவர்!) எச்சரித்தார்.

அமெரிக்க மக்களைத் தவறாக வழிநடத்த நேரடியாகவே கிம்மெல் முயலுவதாகத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார் கர்.

இதைத் தொடர்ந்து, ஜிம்மி கெம்மலின் அரட்டை நிகழ்ச்சி காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக ஏபிசி நிறுவனம் அறிவித்தது; புதன்கிழமையிலிருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. ‘அமெரிக்காவின் பெருமைக்குரிய செய்தி’ என ஏபிசியின் நடவடிக்கையை சமூக ஊடகத்தில் வரவேற்றுப் பாராட்டினார் அதிபர் டிரம்ப்!

ஆனால்...,

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பின்னிரவு தொடங்கி, ஜிம்மி கிம்மெல்லின் நேரலை நகைச்சுவை நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது!

எப்படி? ஜிம்மி கிம்மெல்லின் நிகழ்ச்சி நிறுத்தப்படுவதாக அறிவித்தவுடனேயே தொடர்ந்து அடுத்த சில நாள்களில் கூகுள் தேடலில் நம்ப முடியாத அளவுக்கு அதிகளவில் தேடப்பட்ட ஒரு கேள்வி,

டிஸ்னி பிளஸ் மற்றும் ஹுலு (இதுவும் டிஸ்னிக்குச் சொந்தமானதே) சந்தாவை நிறுத்துவது எப்படி?

-    கூடவே ஹுலுவைப் புறக்கணிப்பது எவ்வாறு?, டிஸ்னிக்குச் சொந்தமான இஎஸ்பிஎன் சந்தாவை நிறுத்துவது எப்படி?

-     ஹுலுவும் இஎஸ்பிஎன்னும் டிஸ்னிக்குச் சொந்தமானவையா?

-    ஏற்கெனவே பணம் செலுத்தியிருக்கும் கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

 என்ற கேள்விகள் பொங்கி வழிந்தன.

ஆக,  ஒரு வாரத்திற்குப் பிறகு கிம்மெல்லின் நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பை ஏபிசியின் உரிமையாளரான டிஸ்னி வெளியிட்டு, நிகழ்ச்சியின்  ஒளிபரப்பையும் தொடங்கிவிட்டது.

“நாடு உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்ய வேண்டாம் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நிறுத்திவைப்பதெனக் கடந்த புதன்கிழமை முடிவெடுத்தோம். பிறகு, தொடர்ந்து ஜிம்மியுடன் பேசினோம். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியை மீண்டும் தொடருவதென்ற முடிவுக்கு வந்தோம்” என்று டிஸ்னி காரணம் தெரிவித்தது.

அமெரிக்காவில் பின்னிரவுகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சுதந்திரமான - தாராளமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அரசுக்கு எதிரான கருத்துகளும் மக்கள் எண்ணங்களும் நகைச்சுவை உணர்வுடன் பகிரப்படுகின்றன.

இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஜிம்மி கிம்மெல் லைவ்  முதல் நிகழ்ச்சியில் மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசிய கிம்மெல், சுதந்திரமான  பேச்சுக்காக “ஆன்ட்டி அமெரிக்கன்” என்பதாக அச்சுறுத்துவதைக் குறை கூறினார்.

கிர்க் கொலைக்காக எந்தவொரு குழுவையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட கிம்மெல், வார இறுதி நினைவு பிரார்த்தனை நிகழ்வில் தன் கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுபவரை மன்னித்ததற்காக எரிகா கிர்க்கைப் பாராட்டினார். ‘தன்னலமற்ற கருணை பொழியும் செயல்; என்னை உருக்கிவிட்டது’ என்றும் எரிகா பற்றித் தெரிவித்தார் அவர்.

எனினும், நெக்ஸ்டர் போன்ற வேறு சில ஒளிபரப்பு நிறுவனங்களின் செல்வாக்குள்ள சில பகுதிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.

ஜிம்மி கிம்மெல் நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கிய நிலையில், அதிபர் டிரம்ப், பிரெண்டன் கர் போன்றோர், தொடர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என உடனடியாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே, ‘வெறுப்பு எண்ணங்களால் வெறுப்புப் பேச்சுகள் தோன்றுகின்றன; அதுவே பிறகு வெறுப்பு நடவடிக்கைகளுக்கும் இழுத்துச் செல்கின்றன’ என்று கருத்துத் தெரிவித்ததற்காக எம்எஸ்என்பிசி ஒளிபரப்பு நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர் மாத்யூ டவுட் வெளியேற்றப்பட்டார்.

கிர்க் கொலை தொடர்பான சமூக ஊடக எதிர்வினைகளில் இனரீதியான இரட்டை நிலைப்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்ததற்காகத் தாம் வெளியேற்றப்பட்டு விட்டதாக வாஷிங்டன் போஸ்ட்டின் பத்தி எழுத்தாளர் கரேன் அட்டியா தெரிவித்தார்.

இதுபோன்ற ‘வாயைக் கட்டும், கையைக் கட்டும்’ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவில் இப்போதெல்லாம் பல்வேறு வகைகளில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

About the show, which was threatened with being stopped due to criticism of President Trump, was resumed due to the silent protest of the people...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் 32 மனுக்கள்

பாலாற்றில் நீா்வரத்து வேண்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேருக்கு தமிழக அரசு விருது

பொதுக்கூட்ட அனுமதிக்கு முன்வைப்புத் தொகை குறித்து விதிமுறைகள் வகுக்க அரசுக்கு அவகாசம்: தவெக வழக்கில் உத்தரவு

SCROLL FOR NEXT