ஜிம்மி கிம்மெலின் பின்னிரவு நேர நகைச்சுவை அரட்டை நிகழ்ச்சியை ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனம் மீண்டும் தொடங்கிய நிலையில், வழக்குத் தொடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளரும் வலதுசாரி கருத்தாளருமான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றிக் கடந்த வார நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஜிம்மி கிம்மெல், இந்தக் கொலையிலிருந்து லாபம் பெற டிரம்ப் ஆதரவாளர்கள் முயலுகிறார்கள் என்றும் இரங்கல் தெரிவிப்பதில் நான்கு வயதுக் குழந்தையைப் போல டிரம்ப் நடந்துகொள்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, மக்களைத் தவறாக வழிநடத்த கிம்மெல் முயலுவதாகவும் இதற்காக ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்ய வேண்டி வரலாம் என்றும் அமெரிக்க ஒளிபரப்பு ஒழுங்கமைப்பின் தலைவர் பிரெண்டன் கர் எச்சரித்தார். வலதுசாரிகளும் விமர்சித்தனர். இதனால், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை டிஸ்னி நிறுவனத்துக்குச் சொந்தமான ஏபிசி நியூஸ் நிறுத்திவைத்தது.
இந்த முடிவை அமெரிக்காவின் பெருமைக்குரிய செய்தி என்பதாக அதிபர் டிரம்ப் வரவேற்றிருந்தார்.
ஆனால், நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற, ரசிகர்களைக் கொண்ட கிம்மெலின் இந்த நிகழ்ச்சியை முடக்கும் நடவடிக்கையைக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதென மக்கள் கொந்தளித்தனர். டிஸ்னி ஒளிபரப்பு நிறுவனங்களின் சந்தாக்களை விலக்கிக் கொள்ளவும், விலக்கிக் கொள்வது எப்படி என்று தேடவும் தொடங்கினர்.
எதிர்பாராத இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு, ஆறு நாள்களுக்குப் பிறகு, மீண்டும் ஜிம்மி கிம்மெலின் நிகழ்ச்சியை ஏபிசி நியூஸ் நிறுவனம் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டது. இந்தத் திடீர் முடிவு காரணமாக, மீண்டும் மிகக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்துள்ள டிரம்ப், வழக்குத் தொடுக்கப் போவதாகவும் எச்சரித்திருக்கிறார்.
சமூக ஊடகமான ட்ரூத்திலும் எக்ஸ் தளத்திலும் அதிபர் டிரம்ப்:
“ஜிம்மி கிம்மெலுக்கு அவருடைய வேலையை மீண்டும் ஏபிசி ஃபேக் நியூஸ் நிறுவனம் திருப்பித் தந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத்தான் வெள்ளை மாளிகைக்கு ஏபிசி தெரிவித்திருந்தது. அப்போதைக்கும் இப்போதைக்கும் இடையே ஏதோ நடந்திருக்கிறது, ஏனென்றால் அவருடைய ரசிகர்கள் எல்லாரும் போய்விட்டார்கள், அவருடைய திறமையும் அங்கே இல்லை. 99 சதவிகித ஜனநாயக ஆதரவுக் குப்பையை ஒளிபரப்புவதன் மூலம் நிறுவனத்தையே சீர்குலைக்கிற, மிகவும் சாதாரணமான, கொஞ்சமும் நகைச்சுவையல்லாத ஒருவரை எதற்காக மீண்டும் அழைக்கிறார்கள்? இவர் ஜனநாயகக் குழுவினரின் இன்னொரு கரம், நான் நன்றாக அறிந்தவரையில் பெரிய சட்டவிரோத பிரசார பங்களிப்பு இருக்கப் போகிறது. இதுதொடர்பாக, ஏபிசிக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போகிறோம் என நினைக்கிறேன். என்ன செய்யலாம் எனப் பார்ப்போம். கடந்த முறை இவ்வாறு தொடுத்தபோது, அவர்கள் 16 மில்லியன் டாலர்கள் தந்தார்கள். இது இன்னமும் அதிகமாகக் கிடைக்கக் கூடியது. உண்மையிலேயே இழக்கப் போகிற கூட்டம்! மோசமான ரேட்டிங் காரணமாக ஜிம்மி கிம்மெல் வீணாகப் போகட்டும்!”
ஆனால், மிரட்டலும் சாபமும் போன்றிருக்கும் டிரம்ப்பின் இந்தப் பகிர்வுக்கு வந்து அவருடைய கருத்தைப் பெருமளவிலானோர் மிகக் கடுமையாகவும் கேலியாகவும் கிண்டலடித்துக்கொண்டும் விமர்சனம் செய்துகொண்டும் இருக்கின்றனர்.
_ கிம்மெலின் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்க விரும்புகிறார் டிரம்ப் என நன்றாகவே தெரிகிறது.
_ அவருடைய (கிம்மெல்) வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் இது.
_ நல்ல கேள்வி: மிகவும் மோசமாக செயல்படுகிற, நகைச்சுவையற்ற, இந்த நாட்டைச் சீர்குலைக்கச் செய்கிற ஒருவரை மீண்டும் கொண்டுவர ஏன் விரும்பப் போகிறார்கள்? (டிரம்ப்பைச் சொல்கிறார்).
_ உங்களை அதிபராக மக்கள் தேர்ந்தெடுக்கும்போது எது வேண்டுமானாலும் சாத்தியம்தான்.
_ நேற்றைய நிகழ்ச்சியில் ஜிம்மி மிகவும் கிரேட். ரேட்டிங்கும் இதுவரையில்லாதது.
_ அது மிகவும் மோசமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஜோக்கை ரசிக்க முடியாவிட்டால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காதீர்கள். ஓ, அந்தக் கடைசிக்கு முந்தைய வரி ஏதோ மாஃபியாக்கள் சொல்வதைப் போலவே இருக்கிறது.
_ அதிபர் தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு, நாட்டை நடத்துவதில் அதிக நேரம் செலவிட்டால் நமக்கெல்லாம் நல்லது.
இப்படியாக, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்தும் ஜிம்மி கிம்மெலை ஆதரித்தும் மக்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் கிம்மெலின் நிகழ்ச்சியை ஏபிசி ஒளிபரப்பத் தொடங்கியதைப் பேச்சு சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியென ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
சில நகரங்களில் தெரியாவிட்டாலும்கூட, ஜிம்மி கிம்மெலின் முதல் நாள் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி வழி மட்டும் 63 லட்சம் பேர் பார்த்ததாக ஏபிசி தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கும்போது இணையவழி யூடியூப் மூலம் 1.50 கோடி பேர் பார்த்ததாகவும் பிற சமூக ஊடகங்களின்வழி பார்த்தவர்களையும் சேர்த்தால் மொத்தம் 2.6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தனர் என ஏபிசி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பின்னிரவுகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை இதுவரையில் வழக்கமாக, 18 லட்சம் பேர் வரை பார்த்துக்கொண்டிருந்தனர். டிரம்ப் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் ‘நெருக்குதல் காரணமாக’ இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றனர்.
தன்னுடைய எதிராளிகளைவிட தன்னையே, தன்னைப் பற்றியே நிறைய நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகிறார் டிரம்ப். அமெரிக்காவின் வேறெந்தவோர் அதிபரையும்விட டிரம்ப்தான் அதிகளவில் நகைச்சுவைப் பொருளாக இருக்கிறார் என்று சில பல்கலைக்கழக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. ஆனால், ஊடகத்தினரோ, மற்ற அதிபர்களைவிட அதிகமான நகைச்சுவைப் பொருள்களை டிரம்ப்தான் அளிக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.