நாடு முழுவதும் எத்தனையோ நடைமுறைகளை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தினாலும் சாலை விபத்துகள் குறைந்தபடில்லை.
சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, எதிர் திசையில் பயணிப்பது போன்று, வாகன விதிகளை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பல சிக்னல் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமும் இ-செலான்கள் விநியோகிக்கப்பட்டு அபராதம் பெறப்படுகிறது.
வழக்கமாக சாலைகளில் போக்குவரத்துக் காவலர் அல்லாமல், டிஜிட்டல் முறையில் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அது தொடர்பான விவரங்கள் வாகன ஓட்டிகளுக்கு செல்போன் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
வாகன விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு இ-செலான் கொடுக்கப்படுகிறது. இ-செலான் கிடைக்கப் பெற்றவர்கள், அதனை ஆன்லைன் மூலமே செலுத்திக் கொள்ளலாம். அது எப்படி என்று அறிய கிளிக் செய்யவும்.
ஒருவேளை, ஒரு ஆண்டுக்குள் அதிக விதிமீறல் அல்லது இ-செலான் கிடைக்கப் பெற்றவர்களை போக்குவரத்துத் துறை கண்காணிக்கும். அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது.
அதாவது, டிஜிட்டல் முறையில் ஒரு வாகன ஓட்டிக்கு அனுப்பப்படும் இ-செலான்கள் கணக்கெடுக்கப்பட்டு ஐந்து முறைக்கு மேல் விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஐந்து அல்லது அதற்கும் மேல் இ-செலான் கிடைக்கப்பெற்றவர்களின் விவரங்கள் கண்காணிக்கப்பட்டு அது தொடருமானால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
வாகன விதி மீறல் என்பது வழக்கமாக அதிவேகத்தில் செல்வது, சிவப்பு சமிக்ஜையை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் போடாமல் செல்வது மற்றும் வாகன நிறுத்துமிடம் அல்லாமல் வேறிடங்களில் வாகனத்தை நிறுத்துவது போன்றவை.
போக்குவரத்துத் துறை தன்னிச்சையாக ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யாது. உரியவர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்படுவார். சில வேளைகளில் எச்சரித்து அனுப்பப்படும். மீண்டும் தொடருமானால் மட்டுமே ரத்து செய்யும் நடவடிக்கை பாயும்.
அதிலும் போக்குவரத்துத் துறை மண்டல அலுவலர் அல்லது மாவட்ட போக்குவரத்து அதிகாரிதான் இது குறித்த முடிவை எடுப்பார்கள். எத்தனை காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என்பது குறித்தும் அவர்களே முடிவு செய்வார்கள்.
இது 3 மாத காலம், 6 மாத காலம் அல்லது ஓராண்டு என போக்குவரத்து விதிமீறலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.