தினமணி கதிர்

ஒரு நூலகம் மறைந்துவிட்டது!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உலகம் ஓர் உயர்ந்தவரை இழந்து, இனி யார் மேற்றுத் தன் நிலைத்தல்? எனக் கவழ்ந்து நிற்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

உலகம் ஓர் உயர்ந்தவரை இழந்து, இனி யார் மேற்றுத் தன் நிலைத்தல்? எனக் கவழ்ந்து நிற்கிறது. தமிழ்த்தாய் தன் தவப்புதல்வன் ஒருவனை இழந்து, இனி இவன் போல் எனை யார் போற்றுவார்? என வருந்தி நிற்கின்றாள். சான்றோர் உலகு தம்மில் ஒருவனை இழந்து, இனி இவன் இடம் நிரப்ப எவர் உளார்? எனக் கலங்கி நிற்கிறது. தங்கத்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் எம்மை ஆட்சிசெய்ய, இனி இவன் போல் எவருளார்? எனப் புலம்பி நிற்கின்றன.



இதுவரை காலமும் நம் தமிழுலகிற்குத் தலைமை தாங்கி நின்ற, பேராசான் தெ.ஞானசுந்தரம் அவர்களின் மறைவு நோக்கியே, இத்தனை புலம்பல்களும் எழுகின்றன. மெல்லிய நெடுத்த வடிவம், எப்போதும் கண்களில் பொங்கி நிற்கும் அறிவொளி, கூரிய நாசி வெளிப்படுத்தும் நுண்ணறிவு இலட்சணம், எப்போதும் எவர் முன்னும் காட்டுகிற, வினயம் வெளிப்படுத்துகிற வித்தைத் தெளிவு, ஆடம்பரமில்லாத ஆடைகள் காட்டும் அடக்கம், இத்தனையையும் ஒன்றுகூட்ட வருவதுதான், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் ஐயாவின் வடிவம்.



அவரது நூலறிவை விரித்துச் சொல்ல, எனது நூலறிவுக்குஆற்றல் இல்லை. தமிழுலகிற்கு அவர் அர்ப்பணித்த பணிகளை, கணக்கிடத்தானும் முடியுமா?



கல்வியின் பயன் அறிவு. அறிவின் பயன் ஒழுக்கம். ஒழுக்கத்தின் பயன் அன்பு. அன்பின் பயன் அடக்கம் என்பது, நம் ஆன்றோர் வகுத்த வரைமுறை. இதனைத்தான் நம் பெரியோர்கள், வித்யாம் வினயசம்பந்தாம் என்றனர். இத்தனையையும் ஒருமித்துக் காண இருந்த ஒருவர் போய்விட்டார். தமிழை நிறுக்கும் தராசு தரணியில் இல்லா தொழிந்தது. இனி என்ன? அறுகம்புற்கள் எல்லாம், தம்மை ஆலமரங்களாய் அறிவித்துக் கொள்ளலாம்.



அடுத்தடுத்துத் தொலைபேசி அழைப்புகள். பாரதி பாஸ்கர், டாக்டர் பிரியா இராமச்சந்திரன், வழக்குரைஞர் சுமதி எனப் பேசிய அனைவருமே, தம் அறிவுத் தந்தையை இழந்து விட்டதாய் அழுகின்றனர். ஆளுமையாளர் அண்ணாமலையிடமிருந்தும், பாரதப் பிரதமர் மோடி அவர்களிடமிருந்தும், இரங்கல் அறிக்கைகள் பதிவாகியிருக்கின்றன. இதைவிட வாழ்வின் வெற்றி என்று ஒன்று வேண்டுமா என்ன?



சபைகளில் அவர் அருகில் நிற்கவும் தகுதியில்லாத, நாங்கள் பேசுகின்ற பொழுது, மாணவ பாவனையில் அமர்ந்து கேட்பார். மேடையால் இறங்கியதும் பாதம் தொடப் பணிந்தால் பதறிப் பின் செல்வார். எத்தனைஅறிவு? எத்தனை அன்பு? எத்தனை அடக்கம்? இந்த இமயம் பற்றிய இரண்டு நினைவுகள் உள்ளத்துள் ஊசலாடுகின்றன. ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.



பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த புதுச்சேரி கம்பன் விழா. நிறைவுநாள் நிறைவுநிகழ்ச்சியாக மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம் நடக்கிறது. ஐயா ஓர் அணியிலும் நான் ஓர் அணியிலுமாக வாதிடுகிறோம். தற்போது அமரர்களாகிவிட்ட பேராசிரியர்களான, ஒளவை நடராஜன் அவர்களும், ப.நமசிவாயம் அவர்களும், பேச எழுந்த என்மேல் அடுத்தடுத்துக் கேள்விக் கணைகளை எறிகிறார்கள். நான் பதில் சொல்லப் பதில் சொல்லக் கேள்விகள் தொடர்கின்றன. அப்போது எனை எதிர்த்துப் பேச வந்த ஐயா அவர்கள் ஆவேசத்துடன் எழுகிறார். ஒரு பேச்சாளனை இப்படி வேண்டுமென்றே வீழ்த்த நினைப்பது அறமன்று, துரியோதனன் சபையில் எழுந்து அறமுரைத்த விகர்ணனின் வார்த்தைகளாய், ஐயாவிடமிருந்து ஆவேச வார்த்தைகள் தெறித்துவிழுகின்றன. எத்தனை நேர்மை, எத்தனை உண்மை, எத்தனை பரிவு, இத்தகைய ஓர் பேராசானை இனிநான் எங்கு காண்பேன்?



எங்களது இலங்கைக் கம்பன் விழாவிற்கு, வருடந்தோறும் தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் வந்துபோகின்றனர். ஐயாவை ஒருதரமாவது அழைப்பித்து எங்கள் விழாவின் தரமுயர்த்தவேண்டுமென, எனக்குத் தணியாத தாகம். எத்தனையோதரம் விண்ணப்பித்தேன், வெறுப்பின்றி மறுத்தார். காரணம் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்னைக் கலங்கடித்தது. எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்கள் வாழ்கின்ற மண்ணை, மறந்தும் மிதிக்க மாட்டேன். வார்த்தைகள் என்னை நெருப்பாய் வாட்ட வருந்தி நின்றேன்.இப்படியும் ஒருதேசப்பற்றா? என் நெஞ்சில் இமயமாய் உயர்ந்தார் ஆசான்.



மரணம் மாறாத இயற்கைதான். ஆனாலும் சிலரது மரணங்கள் அதிரச் செய்துவிடுகின்றன. உண்மையைச் சொல்வதானால் பேராசியர் தெ.ஞானசுந்தரம் அவர்களுடன், தன்னை முன்னிலைப்படுத்த விரும்பாத ஓர் தமிழ் வடிவம் மறைந்துவிட்டது. அறிவை அடக்கத்தால் காட்டி நின்ற ஓர் அற்புத ரூபம் சிதைந்துவிட்டது. அனைத்துக்கும் மேலாக ஓர் அரிய நூலகம் அழிந்துவிட்டது. தமிழுலகம் இந்த இழப்பை எப்படித் தாங்கப் போகிறது? இராமனைத் தொடர்ந்த சீதையாய் ஆசானின் அடியொற்றி நடந்த அன்னை, இத்துயரிலிருந்து எங்ஙனம் மீளப் போகிறார்? தமிழ்த்தாய் இன்னொருவரைத் தயார் செய்யும் வரையில், ஓர் ஐயம் என்றால் இனி நாம் யாரிடம் போகப்போகிறோம்? கேள்விகள் அக்கினியாய் இதயம் சுட, ஏக்கத்துடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

SCROLL FOR NEXT