FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும்.

Updated On : 7 ஜூன் 2026, 4:53 pm IST
பகிர்:

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும். எல்லாவற்றையும் எண்ணியும் கருதியும் நினைத்தும் உள்ளியும் உன்னியும் முடித்தபின், செயலில் இறங்குதல் வேண்டும். இவையெல்லாவற்றையும் உள்ளடக்கித் திருவள்ளுவர் 'எண்ணித் துணிக கருமம்' என்றார்.

நீந்தத் தெரிந்தவன் ஆற்றில் இறங்கலாம். ஏறப்பயின்றவன் மலையில் ஏறலாம். பொருளுணர்ந்து சொல்லவல்லவன் அவையேறலாம். பாய்மா ஊர்ந்து பகைவரைத் தாக்கப் பயின்றவன் போர்க்களம் புகலாம். விண்ணில் ஊர்ந்திடவும், நாவாயைச் செலுத்தவும் பயின்றவன் அவற்றைச் செய்யலாம். எனினும், வினையறிந்தவன் துணிவிலனாயின் எல்லாம் வீணாகும். அஞ்சாமை என்பது உள்ளத்தடத்தில் ஒளிரும் கூரியவாள். அதனை உடையவன் தனியனாயினும் இளையனாயினும் தான் கருதியவாறே வினை முடிப்பான்.

தலையாலங்கானம் என்பது ஒரு சிற்றூர். ஆனால், வேந்தன் ஒருவன் துணிவினால் அவ்வூர் வரலாற்றில் பெரும்பெயர் பெற்றுவிட்டது. அவ்வேந்தன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனாவான். இப்பாண்டிவேந்தன் மிகவும் இளையனாக இருந்தபோது பகைவர் எழுவர் இவனை எளிதில் வென்று விடலாமென்று கருதினர். சேரன், சோழன், திதியன் எழினி, எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் எழுவர் பாண்டியனை வெல்ல ஒன்று சேர்ந்தனர். அவர்தம் படையெடுப்பைக் கேட்டுக் காவலனும், புலவனுமாகிய நெடுஞ்செழியன் வஞ்சினம் மொழிகின்றாள்.

Advertisement

Advertisement

இப்பாண்டியனின் அரசைப் புகழ்கின்றவர்கள் நம்மால் சிரிக்கத் தக்கவர்களே என்று என் பகைவர் எழுவர் கூறிய உரை என்னை வருத்துகின்றது. நான் இளையவனாய் உள்ளேன் என்றும், அவர்கள் கூறியது எனக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தேரும் குதிரையும் யானையும் மறவருமாகிய நாற் படையும் உடையவராம்; அவர்கள் செருக்கோடு என்னைக் குறித்துச் சிறுசொல் கூறுவாராம். தம் உடல் வலிமை கருதிப் பெருமை கொள்வாராம். அவர்கள் போர்க்களத்துக்கு வரட்டும். அவர்களை வென்று அவர்கள் கொண்ட முரசங்களோடு வெல்வேன்; அவ்வாறு வெல்லேனாயின், மாங்குடி மருதனார் தலைமையேற்ற புலவர் அவை என்னைப் பாடாது போகட்டும்; என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்' (புறம் : 72) என்று கூறிப் போர்க்களம் வருகிறான். போரில் எதிர் வந்த வீரரோடு துணிவு மிகக் கொண்டு மோதி அவர்களை எற்றி எறிகிறான். அகவையில் குறைந்தவனாயிற்றே என்று எண்ணியவர்கள் அதிர்கின்றனர்.

இடைக்குன்றூர் கிழார் என்னும் புலவர் பெரு

மகன் இவனுடைய வினைத்திறத்தையும்,

துணிவையும் போற்றிப் பாடுகின்றார். 'ஒருவன் ஒருவனோடு போரிடுதலும் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் நாம் பலமுறை கண்டவைதாம். ஆனால், இதற்குமுன் நாம் கேட்டதில்லை. அதாவது, ஒருவன் எழுவரைப்போரிட்டு வென்ற செய்தி மிகப்புதிது வரலாறு படைத்த செய்திகள் ஆகும் (புறம் : 76) என்று வியந்து போற்று

கின்றார்.

இப்புலவர் பாண்டியனின் போர்ச் செயல்களை நேரில் கண்டு 'ஓ இதுவோ நின் துணிவு' என வியந்தவர். அவருடைய வியப்பு வேறொரு பாட்டாகவும் மலர்கிறது. 'யார் இவை எதிர்பார்த்தார்கள். யார் இவன்? சிறு பருவத்தில் காலில் கட்டிய கிண்கிணியைக் களைந்த இன்றே வீரக்

கழலைக் கட்டிய இவன்யார்! யார் இவன்! பிறந்த

திலிருந்து இன்றே தலையின் முதல் முடியை

நீக்கப் பெற்றவன். யார் இவன்? வேம்பின் தளிரை உழிஞைக் கொடியோடு சேரத் தலையில் அணிந்து தேரில் நிற்பவன். இவன் யார்? இன்னும் சிறுவர் அணியும் ஐம்படைத் தாலியையும் அகற்றாதவன். யார் இவன்? பாலை அருந்துவதை விட்டுச் சோற்றை உண்ண இன்று தொடங்கியவன்' (புறம் : 77) என்று அவனுடைய இளமை பூத்த துணிவைக் கண்டு பாடுகின்றார்.

கோப்பெருநற்கிள்ளி என்பான் ஒரு சோழ இளவல். அவன் தந்தை நித்தன் என்பவன் அரசன். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு விளைந்தது. கிள்ளி தந்தையை விட்டு விலகி வந்து தனியே வாழ்ந்தனன். அவன் போர்ப்பயிற்சிக் கூடம் ஒன்றமைத்து இளைஞர்களைப் போர்க்கலையில் பயிற்றுவித்து வந்தான். அப்போது, ஆமூரிலிருந்து வந்த மல்லன் ஒருவன் பலரையும் வென்று செருக்கொடு அலைந்தான். போரவைக் கோப்

பெருநற்கிள்ளியும் அவனும் மோதுகின்ற நிலை வந்தது. ஆமூரான் நெடுங்காலம் மற்பயிற்சி உடையவன். வளமான உடலும் மெய்வலியும் கொண்டவன். கிள்ளி பொருள்மிகுதி இல்லாத நிலையில் எளிய உணவுண்டு வாழ்பவன். இருவரும் மோதியபோது என்ன நிகழ்ந்தது?

'இனியதும், சாரமிக்கதுமான கள்ளை உடையது ஆமூர். அவ்வூரின் மல்லன் மிக்க வலிமை உடையவன். அவன் கிள்ளியோடு பொருதபோது, கிள்ளி தன்னுடைய ஒரு காலை மடக்கி மண்டியாக மல்லனின் நெஞ்சில் வைத்து அழுத்தினான். மற்றொரு காலால் மல்லனின் எழும் முயற்சியை மடக்கினான். அவனது மற்றொரு காலை முதுகின் கண் கொண்டு போய் வளைத்து நிறுத்தினன். அக்காட்சி யானை பச்சை மூங்கிலை வளைப்பது போலிருந்தது. கிள்ளி, மல்லனின் தலையையும் காலையும் இணையுமாறு மடக்கித் தாக்கிக் கொன்றனன்' (புறம் : 80)

இவ்வாறு சாத்தந்தையார் என்ற புலவர் கிள்ளியின் மனவெழுச்சியைப் பாடுகின்றார். உள்ளத்தில் துணிவு இருந்தால் இமயத்தையும் சாய்க்க இயலும் என்பது ஊக்கமுடையமையின் முதல் விதி.

குழந்தைப் பருவத்திலேயே துணிவு நெஞ்சில் ஊன்றப் படவேண்டும். அச்சுறுத்தியே குழந்தைகளை வளர்த்தல் நாட்டிற்கே கேடாகும். துணிதல் என்பது உள்ளத்தின் வலிமையால் விளைவதாகும். போரவைக் கோப்பெரு நற்கிள்ளியும் நெஞ்சின் உரமிக்க நெகிழாத நிலையினை வில்வென்றியும் மல்வென்றியும் விளைவித்தவர்கள். இளைஞர்கள் இவர்களின் வரலாறுகளை முன்னோடி

களாகப் பயிலவேண்டும்.

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப்போகும்போது சொல்லிவைப்பாங்க-உந்தன்

வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே!

என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் கூறுவதை மாந்தர் எல்லோரும் கருதவேண்டும். மாந்தனின் துணிவால் உருவானது இவ்வுலகம்; இதைத் துணிவினாலேயே வளர்க்க முடியும். மனிதனின் துணிவு இன்று ஆழ்கடலின் அடியில் ஆராய்ச்சி செய்கிறது. முடியுமா? முடியாதா? என்று எண்ணாமல் துணிவே துணையானால் ஆட்சியையும் பிடிக்கலாம்!... அரியணையிலும் அமரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments