தற்போதைய செய்திகள்

கணவரை மாற்றி குடும்பத்துள் குழப்பம் விளைவித்த அரசு விளம்பர புகைப்படம்... தெலங்கானா தம்பதியின் மனக்குமுறல்!

RKV

தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டில் இருக்கும் கோடத் கிராமத்தைச் சேர்ந்த பத்மா மற்றும் நாயகுல நாகராஜு தம்பதியினர் இன்றைய தேதிக்கு தெலங்கானா அரசு விளம்பரத் துறை மீது மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

அரசு விளம்பரமான ‘ரைது பீமா’ மற்றும் ‘கண்ட்டி வெலுகு’ விவசாயக் காப்பீட்டுத் திட்ட விளம்பரங்களுக்காக பத்மா, நாகராஜு தம்பதிகளின் புகைப்படங்களை அம்மாநில அரசு விளம்பரத் துறை பயன்படுத்தி இருக்கிறது. அதிலும் எப்படி? பத்மாவின் கணவர் நாகராஜு அரக்கு எனும் போதைக்கு அடிமையானவராகவும் அவரொரு விவசாயி என்பதாகவும் அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதைக் குறித்துப் பேசும் போது நாகராஜூ தெரிவித்தது, ‘ சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் மனைவியும் வங்கபள்ளி என்ற கிராமத்தில் தனியாகச் சில காலம் வசித்தோம். அப்போது எங்களை அணுகிய ஏஜண்டுகளில் சிலர், நீங்கள் சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தால் உங்களுக்கு எங்களால் லோன் வாங்கித் தர முடியும் என்று கூறினார்கள். அதனால் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க நாங்கள் சம்மதித்தோம். லோனுக்காக எடுத்த புகைப்படங்களை இப்படி அரசு விளம்பரங்களில் பயன்படுத்திக் கொண்டதோடு அந்த விளம்பரங்களில் எல்லாம் எங்கள் குடும்பத்தைப் பற்றி மகா மட்டமாகவும், நானொரு குடிகாரன் என்பது போலவும் காட்டியதைத் தான் எங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 

முதலில் அரசின் விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களில் பயன்படுத்தப் பட்டு வந்த புகைப்படங்களில் நான், என் மகள் மற்றும் கணவருடன் இருந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்கள் வேறொரு ஆணின் புகைப்படத்தை என் அருகில் மார்ஃபிங் செய்து இணைத்திருக்கிறார்கள். தெலங்கானாவின் அத்தனை கிராமத்துச் சுவர்கள் தோறும் வரையப்பட்டிருக்கும் அந்த விளம்பரத்தை காண நேர்ந்த எங்கள் கிராமத்தினர் இப்போது எங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கிறார்கள். இந்த அவமானத்தால் என் மாமானார், மாமியார் வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. எங்களது மொத்தக் குடும்பமும் இதனால் கடுமையான மன உளைச்சலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

இதைப் பற்றி கிராமத்தலைவரிடம் புகார் அளித்தால் அவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை.

ஒரு துண்டு நிலம் கூட இல்லாத எங்களை ஏன் ரைது பீமா, கண்ட்டி வெலுகு விளம்பரத்தில் போதைக்கு அடிமையாகி கஷ்டப்படும் விவசாயியைப் போல சித்தரிக்க வேண்டும். குடும்பப் புகைப்படம் கொடுத்தால் லோன் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி மூளைச்சலவை செய்த ஏஜண்டுகளை நம்பி இன்று நாங்கள் ஏமாந்து நிற்கிறோம். எங்களது குடும்பப் புகைப்படத்தை எத்தனை தூரம் கேவலமாகச் சித்தரிக்க முடியுமோ அத்தனை தூரம் கேவலமாகச் சித்தரித்திருக்கிறது மாநில அரசின் விளம்பரத் துறை. இந்த விஷயத்தில் எங்களுக்கு நீதி வேண்டும். அதனால் தான் இழப்பீட்டுக்கான உதவி கோரி நாங்கள் தெலுங்கானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரை அணுகியிருக்கிறோம். அவரது சார்பில் அரசு விளம்பரத் துறையைக் கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 

எங்களது குடும்பப் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்ததோடு, குடும்ப உறுப்பினர்களின் மன உளைச்சலுக்கும் காரணமானதற்காக அரசு விளம்பரத்துறை முறையாக மன்னிப்புக் கேட்பதோடு உரிய நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்கிறார்கள் பத்மாவும், நாகராஜும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT