கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஃபிப்ரவரி 15 முதல் 22 வரை அங்கே சிகிச்சை பெற்று வந்த அவர் 22 ஆம் தேதி கோவா சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கோவா வந்திருந்தார். அப்போது பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் கோவா மக்களுக்காக அவர் சிறு உரையும் நிகழ்த்தினார். அப்போது, பட்ஜெட் தாக்கலுக்காக சட்டமன்றத்துக்குத் திரும்பினாலும் மனோகர் பாரிக்கருக்கான சிகிச்சைகள் மீண்டும் தொடரவிருப்பதால் அவருக்கு விடுமுறை தேவைப்படுகிறது என அவரே தனக்கு வாக்களித்த மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
நேற்று, செய்தியாளர்களிடையே பேசிய மனோகர் பாரிக்கர், எனக்கு வாக்களித்த கோவா மக்களுக்கு நன்றி, நான் முற்றிலும் குணமடைய மேலும் சில சிகிச்சைகளுக்கு நான் உட்பட வேண்டியதாக இருக்கிறது. அதற்காக தொடர்ந்து மும்பைக்குப் பயணப்பட வேண்டிய தேவை இருப்பதாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒருவேளை வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் வந்தால் அதற்காகவும் சேர்த்து எனக்கு மேலும் சில நாட்கள் விடுமுறை தேவைப்படுகிறது. கடந்த 15 நாட்களாக நான் நலம் பெற வேண்டும் எனப் பிரார்த்தித்த கோவா மக்களுக்கு மிக்க நன்றி. அவர்களது பிரார்த்தனையின் பலனால் தான் நான் இன்று உங்கள் முன் நலம் பெற்றுத் திரும்பியிருக்கிறேன். கணைய நோயால் அவதிப்பட்டு வரும் எனக்கு முற்றிலும் நோய் குணமாக மேலும் சில நாட்கள் தேவைப்படலாம். அதனால் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்த கோவா மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
இங்கே நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா எனும் இரும்புப் பெண்மணிக்கும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த அரசியல் கூத்துக்களோடு ஒப்பிடுகையில் கோவா முதல்வரின் இந்த வெளிப்படையான அணுகுமுறை நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. மாநில முதல்வர்களின் உடல்நலக் குறைபாடு மற்றும் சிகிச்சை பற்றிய வெளிப்படையான அறிவிப்புகளும் அப்படியொன்றும் ரகசியம் காக்கப்பட வேண்டியவை அல்ல. அவர்களை நம்பி வாக்களித்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளத் தக்க விஷயங்களே என்ற புரிந்துணர்வுடன் மக்களுக்குத் தனது சிகிச்சை விவரங்களைத் தெரிவித்து முறையான அறிவிப்புடன் விடுமுறை பெற விரும்பும் இந்த முதல்வர் இவ்விஷயத்தில் பிற மாநில முதல்வர்களுக்கு சிறந்த முன்னுதாரணமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.