தற்போதைய செய்திகள்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை: தமாகா வலியுறுத்தல்

DIN

சிதம்பரம்:  கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளையும் பொருட்படுத்தாமல் முகக் கவசமின்றி நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணியை எதிர்க்கட்சியினர் குறை கூறுவதை ஏற்க முடியாது என்றும் சிறப்பான தடுப்பு பணியை மேற்கொண்டுள்ள முதல்வருக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு, தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினரும், மூப்பனார் பேரவை நிறுவனருமான எம்.என்.ராதா கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

"கரோனா நோய் தொற்று எப்பொழுது முழுமையாக குறையும் என்று இறைவனுக்குத் தான் தெரியும், மக்கள்  ஒத்துழைத்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து உண்மையான கருத்து.

கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பெரும்பாலும் வெளியில் செல்வதைத்  தவிர்த்தால் தொற்று பரவல் குறைய துவங்கும்.

மக்களின் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோயை தடுக்க இயலும்.

தமிழக அரசால் இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலான சோதனை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகளும் மற்ற இடங்களிலும் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வசதி இல்லாதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வசதி இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். பரிசோதனையும் செய்துகொள்ளலாம். முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் நடமாடுகின்றனர். கரோனா வைரஸ் பரவும் அபாயம் குறித்து இன்னும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.

காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும். அப்படி முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சாலையில் சுற்றித் திரியும் நபர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடிதத்தில் எம்.என்.ராதா கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT