முகப்பு
தற்போதைய செய்திகள்

கூத்தாநல்லூரில் அம்மா உணவகத்தில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டார்.

கூத்தாநல்லூர் நகராட்சி  அம்மா உணவகம், புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வருகிறது. இந்த அம்மா உணவகத்தில், ஏழை, எளியவர்களுக்காக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், ஒரு சாம்பார் சாதமோ, தயிர் சாதமோ எந்த சாதமாக இருந்தாலும் ரூ. 5 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஒருவிதத்தில் பண இழப்பு ஏற்பட்டாலும், ஏழை, எளியவர்களால் பசியாற முடிகிறது. சிக்கலான இந்த கரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள் உள்பட அனைவருக்கும் விலையில்லாமல் தொடர்ந்து உணவுகள் வழங்கப்படுகிறது.

கூத்தாநல்லூர் அம்மா உணவகத்திலிருந்து, கரோனா தொற்றை அடுத்து, 3 வேளையும், இருப்பிடம் தேடிச் சென்று, தினமும் 850 பேருக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்தக் காலத்தில் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுக்கான செலவை அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளர்களே ஏற்றுள்ளனர்.

இந்த நிலையில், கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் திடீரென ஆய்வு செய்தார்.

ஆணையர் லதா, வட்டாட்சியர் தெய்வநாயகி, பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், மாவட்ட எம் ஜி ஆர் மன்றச் செயலாளர் எல்.எம். முகம்மது அஷ்ரப், நகரச் செயலர் டி.எம்.பஷீர் அகம்மது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் உதயகுமார், எம்.ஜி.ஆர். மன்ற நகரச் செயலாளர் ராஜசேகரன்,எஸ்பி காளிதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அம்மா உணவகத்தின்  சமையல் அறைக்குச் சென்று, உணவுகள் சுவையாகவும், சுத்தமாகவும் உள்ளதா என அமைச்சர் இரா . காமராஜ் சோதித்துப் பார்த்தார். சாம்பார் சாதத்தை கிண்டிப் பார்த்து, சாம்பார் சாதத்தில் வெள்ளை தெரியக் கூடாது என பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அம்மா உணவகம் வந்திருந்த ஏழை ,எளியவர்களுடன் சேர்ந்து சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்தைச் சாப்பிட்டார். மேலும், சாப்பிட வந்த முதியவர்களிடம் நன்றாக சாப்பிடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.