புதுகையில் கருணாநிதி சிலை திறப்பு: காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் வெண்கலச் சிலையை திங்கள்கிழமை காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் 9 அடி உயர வெண்கலச் சிலையை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் திமுக மாவட்டச் செயலர்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு), சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன், இலக்கிய அணி துணைத் தலைவர் இராசு. கவிதைப்பித்தன், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த. சந்திரசேகரன், நகர திமுக செயலர் க. நைனாமுகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசிவருகிறார்.
இதற்காக மாவட்டம் முழுவதும் மாவட்ட திமுக தொழில்நுட்ப அணியினரின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 600 இடங்களில் காணொலி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.