தற்போதைய செய்திகள்

யூடியூப் வருமானத்திற்காக மாணவர்களை கண்டுகொள்ள மறுக்கின்றனரா ஆசிரியர்கள்?

DIN

கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் பாடம் நடத்திவரும் பள்ளி ஆசிரியர்கள் யூடியூப் தளத்தில் வருமானம் ஈட்டுபவர்களாக மாறியுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் நிலையை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தங்களின் வகுப்பின் பாட காணொலிகளை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருவது அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் யூடியூப் தளத்தில் இருந்து வருமானம் பெறும் நபர்களாக ஆசிரியர்கள் மாறி வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை இணைய வழியில் நேரடியாக சந்திக்காமல் தங்களது யூடியூப் விடியோக்களின் இணைப்புகளை ஆசிரியர்கள் அனுப்புவதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் தடைபடுவதாக தெரிவிக்கும் கல்வியாளர்கள் ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் விதிகளுக்கு மாறாக இதுபோன்ற வழிகளில் வருமானம் ஈட்டுவது தடுக்கப்பட வேண்டிய சூழலில், மாணவர்களை கவனிக்க வேண்டிய நேரத்தை யூடியூப் விடியோக்களை தயாரிக்க ஆசிரியர்கள் செலவிடுவதாக புகார்களும் எழுந்து வருகின்றன.

இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராம்குமார், “விதிகளுக்கு மாறாக யூடியூப்பில் வருமானம் ஈட்டி வரும் ஆசிரியர்கள் பல்வேறு வாட்ஸ்ஆப் குழுக்களில் தங்களின் விடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் ஆதாரமற்ற செய்திகளைப் பகிர்வது, அவற்றுக்கென தனியாக இணைய தளங்களை நடத்தி அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என அரசு கல்வித் தொலைக்காட்சியை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் பொறுப்பற்ற முறையில் தங்களது வருமானத்திற்காக யூடியூப் சேனல்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பது உடனடியாக கலையப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT