டாக்கா: வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 91 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இணைய சேவை துண்டிப்பு மற்றும் நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் பதவி விலகல் என்ற ஒரு அம்சக் கோரிக்கையுடன் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) முதல் அரசுக்கு எதிராக காலவரையற்ற ஒத்துழையாமை போராட்டத்தை ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்தது.
ஒத்துழையாமை போராட்டத்தில் அரசுக்கு வரி செலுத்தவேண்டாம், மின்சாரம், குடிநீா் கட்டணங்கள் போன்றவற்றை செலுத்த வேண்டாம், அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம், அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்களிடம் அந்த இயக்கம் முன்வைத்தது.
இதற்கிடையில், ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் பிற உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஹசீனா, நாடு முழுவதும் போராட்டம் என்ற பெயரில் நாசவேலையில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் அல்ல, பயங்கரவாதிகள் என்றும், அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் வன்முறை பரவிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் 13 மாவட்டங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், சமீபத்திய வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 91 போ் பலியாகினா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.
டாக்காவின் புறநகர் பகுதியான முன்ஷிகஞ்சில் நடைபெற்ற போட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரா்களுக்கும், அவாமி லீக் கட்சியினா், அக்கட்சியின் மாணவா் அணியான சத்ரா லீக், இளைஞா் அணியான ஜுபோ லீக் ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மூன்று பேர் பலியாகினா். 30 போ் காயமடைந்தனா்.
ரங்பூரில் ஏற்பட்ட மோதலில் அவாமி லீக்கை சோ்ந்த 4 போ் பலியாகினா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பாப்னா பகுதியில் அவாமி லீக் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டதில் 16 வயது சிறுவன் உள்பட 4 மாணவா்கள் பலியாகினர். 50 போ் காயமடைந்தனா்.
சிராஜ்கஞ்ச் பகுதியில் போராட்டக்காரா்களுடன், அவாமி லீக் ஆதரவாளா்கள் மற்றும் காவல் துறையினருக்கான சண்டையில் 4 போ் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று போக்ரா மற்றும் மகுரா பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் சத்ரா லீக் பிரமுகா் உள்பட 6 போ் பலியாகினர் கொமில்லா பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஜுபோ லீக்கை சோ்ந்த ஒருவர் பலியானார். 3 சிறாா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ஃபெனியில் குறைந்தது 5 பேர், போலாவில் 3 பேர், சில்ஹெட்டில் 2 பேர், ஜாய்புர்ஹாட்டில் ஒன்று, டாக்கா மற்றும் பாரிசாலில் தலா ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாக்காவின் ஷாபாக்கில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் திரண்டு பிரதமா் ஹசீனா பதவிவிலக வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். அங்குள்ள வங்கபந்து ஷேக் முஜீப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்த பல வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் தீ வைத்தனா்.
இன்றைய போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் காவல் நிலையங்கள், ஆளும் கட்சி அலுவலகங்கள் மற்றும் அவர்களின் தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல வாகனங்களை எரித்தனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியது.
முகநூல், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் சேவையை நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 4ஜி செல்போன் இணைய சேவையை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் 14 போலீசார் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 13 பேர் சிராஜ்கஞ்ச் எனயட்பூர் காவல் நிலைய போலீசார் எனவும், 300-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், காவல் துறைக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 200-க்கும் மேற்பட்டோா் இறந்தனா்.
இந்தப் போராட்டத்தின்போது மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதை கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டக்காரா்களை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தை அடுத்து டாக்காவில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல வாகனங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டன.
தடிகளுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்தவர்கள் தனியார் கார்கள், ஆம்புலன்ஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பேருந்துகளை சேதப்படுத்தினர். இது மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நான்கு பேரின் உடல்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நான்கு பேரின் உடல்களுடன் மத்திய ஷஹீத் மினாருக்குச் சென்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஷாபாக், ஷானிர் அக்ரா, நயாபஜார், தன்மோண்டி, அறிவியல் ஆய்வகம், பால்டன், பிரஸ் கிளப் மற்றும் முன்ஷிகஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து 56 பேர் துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பிற அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
தங்களின் ஒரு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாள்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.