ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார நாளான புதன்கிழமை காலை 9:05 மணிக்கு ஆடிப்பூர தேரோட்டம் தொடங்கியது. 'கோவிந்தா கோபாலா' என கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது.
பெரியாழ்வாரின் அவதார நாளான ஆனி சுவாதி திருவிழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5 -ஆம் நாள் விழாவான செவ்வாய்கிழமை காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ஆம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.
ரெங்கநாதர், கள்ளழகர் உடுத்திய பட்டு வஸ்திரம்:
தேரோட்டத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில் சுந்தரராஜபெருமாள் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம், பூமாலை மற்றும் மங்கல பொருட்கள் செவ்வாய்க்கிழமை ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது.புதன்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பின் மஞ்சள் பட்டு உடுத்தி ஆண்டாள், வெண்பட்டு உடுத்தி ரெங்கமன்னார் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாளுக்கு ஶ்ரீரங்கம், மதுரையில் இருந்து வந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9:05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 7 வடங்களையும் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்தனர். தேருக்கு பின்னால் இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்திமான்ராஜ், நகர் மன்ற தலைவர் ரவிக்கண்ணன்,ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம்,மாவட்ட கவுன்சிலர் கணேசன்,மல்லி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.